இந்த வருடப்பிறப்பை இன்னும் இனிமையாக்க பாட்டி கால சுவையை மீட்கும் மாங்காய் பச்சடி!
இன்று அனைவரும் தமிழ் புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
இந்த பண்டிகையை இன்னும் சிறப்பாக கொண்டாட நம் பாட்டி சமையல் கைப்பக்குவத்தை கொண்டு வரும் வகையில் இன்று மண்சட்டியில் மாங்காய் பச்சடி செய்யும் முறையைத் தான் இன்று சுவைக்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
- பச்சை மாங்காய் - 1
- வெல்லம் - 1 கப்
- பச்சை மிளகாய் - 1
- வேப்பம்பூ - கையளவு
- மஞ்சள் தூள் - சிட்டிகை
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- கடுகு- 1 தேக்கரண்டி
- வர மிளகாய் - 1
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- பெருங்காயம் - தேவைக்கு ஏற்ப
- நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை
முதலில் பச்சை மாங்காய்களை நன்றாக கழுவி, தோலை சீவி உள்ளிருக்கும் கொட்டையை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு வெல்லத்தையும் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.
இப்போது மண்சட்டியில் ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு பச்சை மிளகாயையும் மாங்காயையும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
கொஞ்சம் கொதிந்து வந்ததும் அதனில் பொடித்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு வேப்பம் பூவை சுத்தம் செய்து வேகவைத்துள்ள மாங்காயில் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது நன்றாக குழைந்து வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய், கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை வேகவைத்த மாங்காயையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
இப்போது பாட்டி சுவையில் இருக்கும் மாங்காய் பச்சடி தயார்.