சளி, வறட்டு இருமலை ஓட ஓட துரத்த வேண்டுமா? நெஞ்செலும்பு சூப் செய்யும் அற்புதம்
அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் மட்டன் என்றாலே தனி இடம் உண்டு. அந்த வகையில் நெஞ்செலும்பு சூப் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நெஞ்செலும்பு
மட்டன் நெஞ்செலும்பு சூப் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு சூப் வகை. குறிப்பாக தென்னிந்தியாவில் இதற்கு ஒரு தனி மவுசு உண்டு.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மட்டன் நெஞ்செலும்பு சூப் ஃபேவரட் என்றால் அது மிகை அல்ல.
வெயில் காலம் முடிந்து ஆடிமாதம் தொடங்கி உள்ள நிலையில் கடுமையான காற்றும் மற்றும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சளித்தொல்லை இருமல் என பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறி உள்ளது.
இப்படி ஜலதோசத்தால் அவதிப்படுபவர்கள் காட்ட சாட்டமாக நெஞ்செலும்பு சூப் செய்து சாப்பிட்டால் தொண்டைக்கு மிகவும் இதமாக இருக்கும். சளியையும் கட்டுப்படுத்த உதவும்.
மட்டன் நெஞ்செலும்பு சூப்பை வெவ்வேறு பகுதிகளில் அங்கு இருக்கும் சமையல் முறைக்கேற்ப சிறு சிறு மாற்றங்களோடு மக்கள் செய்து சுவைக்கிறார்கள். பெரும்பாலும் எந்த வகையில் இதை சமைத்தாலும் இதன் சுவை அட்டகாசமாகவே இருக்கும்.
மட்டன் நெஞ்செலும்பு சூப்பில் அதிக அளவு கால்சியம் மற்றும் புரதச்சத்து இருப்பதினால் இவை நம் எலும்பு மற்றும் தசைகளுக்கு மிகவும் நல்லது. மேலும் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் இதில் சிறிது மிளகு தூள் அதிகமாக போட்டு பருகினால் உடம்புக்கு நன்கு இதமாக இருக்கும்.
நன்மைகள் என்ன?
நெஞசெலும்பை பெரும்பாலும் சூப் வைத்தே குடிப்பார்கள். இதற்கு காரணம் என்னவெனில், எலும்புகளை நன்றாக வேக வைக்கும்போது, எலும்பு மஜ்ஜையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வெளிப்பட்டு நமக்கு முழுமையான சத்துக்களாக கிடைக்கின்றது.
இதில், கொலாஜன், குளுட்டமைன், புரோலின், கிளைசின், காண்ட்ராய்டின் சல்பேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், மூட்டுகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன.
குடல் ஆரோக்கியத்திற்கும், வயிற்று புண்களால் அவதிப்படுபவர்களுக்கும் இந்த நெஞ்செலும்பு சூப் அருமையான தீர்வாக இருக்கின்றது.
வாயு தொந்தரவு நீங்கி, நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவது மட்டுமின்றி ரத்த வெள்ளை அணுக்களை அதிகமாகவும் உற்பத்தி செய்கின்றது.
கொலாஜன் இந்த எலும்பு சூப்பில் நிரம்பி உள்ளதால், நம்முடைய சருமத்துக்கும், தலைமுடி, தோல், நகங்களுக்கும் வலு தருவதுடன், சரும சுருக்கங்களும் விலகுகின்றது.
இதய நோய், புற்றுநோய், நீரிழிவு போன்ற பல நாட்பட்ட நோய்களுக்கு அடிப்படை காரணம் அழற்சியே. இதனை வராமலும் இந்த சூப் குறைக்கின்றது.
கர்ப்பிணிகளுக்கு மிகவும் உகந்த சூப் ஆகும். பிரசவம் முடிந்த பெண்களுக்கு உடல் பலத்திற்கும், குழந்தையின் நலத்திற்கும் இந்த சூப் செய்து கொடுப்பதுண்டு.
வளரும் குழந்தைகள், பருவமடைந்த பெண்கள், பாலூட்டும் பெண்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், பலவீனமானவர்கள் என அத்தனை பேருக்கும் இந்த நெஞ்செலும்பு சூப் மட்டுமே பிரதான பலத்தை தருகிறது.
தேவையான பொருட்கள்
250 கிராம் நெஞ்செலும்பு கறி
12 to 14 சின்ன வெங்காயம்
1 தக்காளி
4 to 5 பல் பூண்டு
3 to 4 கிராம்பு
¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
1 மேஜைக்கரண்டி சோம்பு
1 மேஜைக்கரண்டி சீரகம்
1 மேஜைக்கரண்டி மிளகு
1 மேஜைக்கரண்டி தனியா
1 துண்டு பட்டை
1 பிரியாணி இலை
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கருவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை
முதலில் நெஞ்சு எலும்பை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்பு தக்காளி, கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, வெங்காயம் மற்றும் பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜார் ஒன்றில் மிளகு, தனியா, சீரகத்தை போட்டு அரைத்து கொள்ளவும். அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்த பின் அதில் கிராம்பு, பட்டை, சோம்பு, மற்றும் பிரியாணி இலையை போட்டு வதக்கி, பின்பு சுத்தம் செய்து வைத்திருக்கும் நெஞ்செலும்பையும் போட்டு வதக்கவும்.
நன்றாக சிறிது நேரம் வதக்கிய பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலா, தட்டி வைத்திருக்கும் வெங்காயம் பூண்டை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
பின்பு இதனுடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்ந்து கலந்து விட்டு, தேவையான அளவு தண்ணீர் உற்றவும்.
பின்பு குக்கரை மூடி வைத்து சுமார் 10 விசில் போட்டு இறக்கவும். தற்போது உடம்பிற்கு வலு சேர்க்கும் சுவையான நெஞ்செலும்பு சூப்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |