விஜய் வந்திருந்தால் வேறு பெண்ணிற்கு தாலி கட்டியிருப்பேன்! இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி
இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மனைவியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருக்கடையூர் கோவிலுக்குச் சென்று ஹோமம் செய்து வழிபட்டு வந்தனர்.
திருக்கடையூர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீன பரிபாலனத்திலுள்ள ஸ்ரீ அபிராமி உடனுறையும் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயனுக்கு 'என்றும் 16' வரம் வழங்கி சிவபெருமான் காலசம்ஹாரமூர்தியாக அருள்பாலிக்கும் இக்கோயில் ஆயுள்விருத்தித் தலமாகக் கருதப்படுகிறது.
எனவே இங்கு பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக சஷ்டியப்தபூர்த்தி, உத்தரதசாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு யாகபூஜைகள் செய்து வழிபடுகிறார்கள்.
இதற்காகப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் வருகிறார்கள். இத்தலத்தில் மட்டும்தான் ஆண்டு முழுவதும் இத்தகைய ஆயுள் விருத்தி வேண்டி சஷ்டியப்தபூர்த்தி (அறுபதாம் கல்யாணம்) செய்யப்படுகின்றது.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்
திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், அவர் மனைவி சோபா ஆகிய இருவர் திருக்கடையூர் கோயிலுக்குச் சென்றிருந்தனர்.
எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு செய்தனர்.
16 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மிருத்தியுஞ்ச் ஹோமம், ஆயுள்விருத்தி ஹோமம் சுதர்சன் ஹோமம், துர்கா, சப்தமி அஷ்டலட்சுமி, நட்சத்திர ஹோமம் நடத்தியபின், 16 கலசங்களிலுள்ள புனித நீர் தம்பதியினருக்குத் தெளித்தபின், சதாபிஷேக ஹோமம் செய்து வழிபட்டுள்ளனர்.

மகனுக்கும் தந்தைக்கும் இடையே பிரச்சினை
நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நடந்து வந்த நிலையில் இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் குறித்த திருமணம் குறித்தும், நடிகர் விஜய் வராதது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு மிகவும் கோபமாக பதில் அளித்துள்ளார்.
அவர் கூறிய பதிலில், விஜய் அங்கு வந்திருந்தால், கூட்டம் காரணமாக நான் எனது மனைவியை விட்டு வேறொரு பெண்ணிற்கு தாலி கட்டியிருப்பேன்.
விஜய் வந்துவிட்டால் அந்த இடம் எவ்வாறு இருக்கும், மக்கள் கூட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
எனக்கும், எனது மகனுக்கும் இருக்கும் பிரச்சினை வேறு என்னதான் இருந்தாலும் நாங்கள் அப்பா மகன்... ஆதலால் வாழ்த்து கூறினாலும், பேசாவிட்டாலும் பிரச்சினையே இல்லை... ஹைத்ராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து இதற்காக இங்கு வரவேண்டுமா? இந்த பூஜை அவ்வளவு கூட்டத்துடன் நடக்க வேண்டுமா? என்று கூறியுள்ளார்.
