வெயில் காலத்தில் நீர்க்கடுப்பு? அதுக்கு இந்த பாட்டி வைத்தியமே போதும்
சீறுநீரக பாதையில் உண்டாகும் அழற்சியே நீர்க்கடுப்பாகும். இது சிறுநீரகத்திலோ, சிறுநீரகம் வரும் பாதையிலோ, சிறுநீரகம் தேக்கி வைக்கும் இடத்திலோ கூட உருவாகலாம்.
இதனால் பல விளைவுகளுக்கு முகம் கொடுக்கவேண்டி வரும். அதாவது, அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற எண்ணம், சிறுநீர் போகும்போது தாங்க முடியாத வலி, காய்ச்சல், சிறுநீரக உறுப்பில் வலி.
இது ஈகோலி எனும் பக்டீரியாவால் வரும். இருப்பினும் வெயில் காலத்தில் அதிகப்படியான நீர் வெளியேற்றம் காரணமாகவும் இது வரக்கூடும்.
அந்தக் காலத்தில் எல்லாம் நீராகாரம், நுங்கு, பதநீர், இளநீர், கம்பங்கூழ் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொண்டார்கள். இதனால் அக்காலத்தில் பெண்கள் அவ்வளவாக இந்த பிரச்சினையை எதிர்கொள்ளவில்லை.
சரி இனி நீர்க்கடுப்புக்கு என்னென்ன பாட்டி வைத்தியங்கள் செய்யலாம் எனப் பார்ப்போம்.
உளுந்து ஊறவைத்த நீர் - இரண்டு தேக்கரண்டி உளுந்தை ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுக்க ஊறவிடவும். மறுநாள் காலையில் அந்த நீரை மாத்திரம் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்துவர வேண்டும்.
கற்கண்டு - பழுப்பு நிறத்தில் இருக்கும் கற்கண்டை பொடியாக்கிக் கொள்ளவும். அதன்பின்னர் சீரகத்தையும் இலேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி சீரகப் பொடியையும் இரண்டு தேக்கரண்டி கற்கண்டு பொடியையும் சேர்த்து நன்றாகக் கலக்கி குடிக்கவேண்டும். இதை தினமும் மூன்று வேளை குடிக்கலாம்.
வெந்தயமும் இளநீரும் - இளநீரை வெட்டி அதில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை சேர்த்து அப்படியே மூடி வைக்கவேண்டும். ஒரு மணிநேரம் கழித்து இளநீரை குடித்தால் உடல் உஷ்ணம் முழுவதும் அப்படியே குளிர்ச்சியடையும்.
கருப்பட்டி, புளிக்கரைசல் - புளிக்கு ஆறு மடங்கு அளவு கருப்பட்டியைச் சேர்க்க வேண்டும். கருப்பட்டியை பொடி செய்து வைக்கவும். பின்னர் புளியை கரைத்து அரை டம்ளர் அளவு எடுத்து அதில் கருப்பட்டி பொடியை சேர்த்து நன்றாக கலக்கி குடிக்க வேண்டும்.
பார்லி அரிசி - பார்லி அரிசியை ஒரு கைப்பிடி எடுத்து அதற்கு 10 மடங்கு அளவு நீர் கொதிக்கவிட வேண்டும். பின்னர் ஆறு விசில் வரும் வரை விட்டு இறக்கி அந்த நீரை மேலாக எடுத்து குடிக்க வேண்டும்.