முல்லிகாடாவ்னி சூப்: நீரிழிவு நோயாளிகள் அருந்தலாமா?
பழங்கால உணவாக இருக்கும் முல்லிகாடாவ்னி சூப் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முல்லிகாடாவ்னி
200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட முல்லிகாடாவ்னி சூப் (மிளகு டவ்னி சூப் Milagu Tawny Soup என்றும் அழைக்கப்படுகிறது) ஆங்கிலோ-இந்திய உணவு வகைகளின் ஆரம்பகால உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
காய்கறிகள், அரிசி, மசாலாப் பொருட்கள் மற்றும் இறைச்சி ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த சூப், பகுதியளவு திரவ உணவாகும்.
அதாவது தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியர்களின் உணவில் தவறாமல் இடம் பெறும் மிளகு ரசமே இந்த முல்லிகாடாவ்னி சூப்பின் மூலமாகும். மிளகு ரசம் என்பதுதான் இந்திய சமையல்காரர்களால் சற்றே மாற்றியமைக்கப்பட்டு, முல்லிகாடாவ்னி என்று தயாரிக்கப்பட்டது.
இது ஆரம்ப காலகட்டத்தில் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு பிடித்தமான சூப்பாக இருந்தது மட்டுமல்லாமல் இன்றும் இங்கிலாந்தில் இந்த சூப் புகழ்பெற்று விளங்குகிறது.
வரலாறு என்ன?
முல்லிகாடாவ்னி சூப் முதன்முதலில் 18ம் நூற்றாண்டில் சென்னை மாகாணத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளிடம் வேலை செய்த தமிழ்நாட்டின் சமையல்காரர்களால் தயாரிக்கப்பட்டது.
பின்னர் இது அதே நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவில் வசித்த பிரித்தானியர்களிடையே இந்த சூப் ஒரு பிரபலமான உணவுப் பொருளாக மாறியது.
ஆங்கிலேயர்கள் இந்த சூப் குறித்து உணவு குறித்து பல புத்தகங்கள் மற்றும் ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர். 1784 கடற்படை சாண்டியை மேற்கோள் காட்டி ஆங்கில இராணுவப் பாடலில் இந்த சூப் குறித்த குறிப்பு ஒன்று காணப்படுகிறது:
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர்.
அவர்களில் பலர் தங்கள் தாய்நாட்டின் சமையலறை பொருட்களை தம்முடன் கொண்டு வந்தாலும், இந்திய சமையல்காரர்களின் கைப்பக்குவத்தை நம்பியிருந்தனர்.
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த அதிகாரிகள், உணவுக்கு முன் சூப் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இருப்பினும், இந்திய சமையல்காரர்களுக்கு, அத்தகைய உணவைத் தயாரித்து பரிமாறுவது ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது.
காய்கறிகளுக்குப் பதிலாக ஆங்கிலேயர்களின் ருசியின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த சூப்பில் கோழி மற்றும் மட்டன் போன்ற இறைச்சி பொருட்களும் சேர்க்கப்பட்டன.
நீரிழிவு நோயாளிக்கு நல்லதா?
முல்லிகாடாவ்னி சூப் ஒருவேளை நாம் பருகினால் இதில் 277 கலோரிகளைத் தருகிறது. இதில் கார்போஹைட்ரேட்டுகள் 107 கலோரிகள், புரதங்கள் 35 கலோரிகள் மற்றும் மீதமுள்ள கலோரிகள் கொழுப்பிலிருந்து வருவது ஆகும். நாம் தினசரி இதனை எடுத்துக் கொண்டால், மொத்த தினசரி கலோரியின் தேவையில் 14 சதவீதத்தினை இது வழங்குகின்றது.
இந்த முல்லிகாடாவ்னி சூப்பானது உடல் எடை குறைப்பவர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது அல்ல. ஏனெனில் இதில் க்ளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம் உள்ளது. இவை நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை பாதிக்கின்றது.
நன்மைகள்
இந்த சூப்பில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகின்றது. பெரியோர் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் எலும்பு ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
இதில் உள்ள பாஸ்பரஸ் எலும்புகளை உருவாக்க கால்சியத்துடன் நெருக்கமாக செயல்படுகிறது.
மேலும் இதில் அடங்கியிருக்கும் வைட்டமின் பி 1 நரம்புகளைப் பாதுகாக்கிறது. இதிலிருக்கும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தில் உதவுகிறது.
இதிலுள்ள நார்ச்சத்து இதய நோய்களைத் தடுப்பதுடன், ரத்த சிவப்பணுக்காளை உருவாக்குவதற்கு உதவுகின்றது.
நீரிழிவு நோயாளிகள் இதில் அதிக பழங்கள், காய்கறிகள், ஓட்ஸ், முழு தானியங்கள் ஆகியவற்றை சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
சூப் செய்ய தேவையான பொருட்கள்
மைசூர் பருப்பு - 200 கிராம்
வெங்காயம் - 2
பூண்டு - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
கொப்பரை தேங்காய் பவுடர் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி தண்டு - ஒரு கைப்பிடி
பச்சை ஆப்பிள் - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
மிளகு தூள் - ஒன்றரை ஸ்பூன்
ப்ரஷ் கிரீம் - ஒரு கரண்டி
சாதம் - 20 கிராம்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
கறி பவுடர் செய்ய தேவையான பொருட்கள்
தனியா - 3 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
மிளகு - ஒன்றரை ஸ்பூன்
சோம்பு - 1
பட்டை - 4 துண்டு
ஏலக்காய் - 6 அல்லது 8
லவங்கம் - 6
காய்ந்த மிளகாய் - 10
அன்னாசி பூ - 4
கடுகு - ஒன்றரை ஸ்பூன்
அரிசி - 3 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் கறி பவுடர் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக கடாயில் சேர்த்து வறுத்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
சூப் செய்வதற்கு பருப்பை முதலில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வேக வைத்த பருப்பை சேர்த்து பின்பு இதனுடன் அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.
சற்று கொதி வந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொப்பரை தேங்காய் பவுடர், கொத்தமல்லி தண்டு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின்பு வெட்டி வைத்திருக்கும் ஆப்பிளை சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து மீண்டும் 10 நிமிடம் கொதிக்க விட்டு நன்கு வேக வைக்கவும்.
தொடர்ந்து பொடி செய்து வைத்திருக்கும் கறி பவுடரை 2 ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். குறித்த சூப்பை நன்றாக மசித்து சல்லடை வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பிரித்து வைத்திருக்கும் சூப்பை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, இதனுடன் கொத்தமல்லி இலை, மிளகு பொடி, ப்ரெஷ் கிரீம் இவற்றினை சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசியாக அடுப்பை அணைத்த பின்பு எலுமிச்சை சாறை, வேக வைத்த சாதத்தையும் சேர்த்து பரிமாறலாம். இதில் நீங்க விரும்பிய காய்கறிகளையோ அல்லது கறிகளையோ சேர்த்தும் சமைத்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |