மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்ற ஊர்களில் ஒன்றான மதுரையில் கறி தோசை மிகவும் பிரபலமாகும். இந்த தோசையை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
அடியில் தோசை, மேலே கறி மசாலா, அதன் மீது முட்டை என மூன்று அடுக்குகளில் செய்யப்படும் கறி தோசைக்கு சைட் டிஷ் எதுவும் தேவையே இல்லையாம்.
கறிதோசை மசால் செய்ய தேவையான பொருட்கள்
மட்டன் அல்லது கோழி கறி (நறுக்கியது) - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
தக்காளி 2 - (நன்றாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
கடாய் ஒன்றில் நெய் ஊற்றி சீரகம், கிராம்பு, பட்டை, ஏலாக்காய் போட்டு முதலில் தாளிக்கவும். பின்பு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி, கறியை சேர்க்கவும், தேவையான மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு கறியை வேக விடவும்.
மிதமான தீயில் 15 நிமிடங்கள் மூடி வைத்து வேகவைத்த பின்பு, கடைசியாக புதினா, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.
கறி தோசை செய்முறை
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி ஊத்தப்பம் போன்று போடவும்.
பின்பு அதன் மீது முட்டையை உடைத்து ஊற்றி தோசை மீது பரப்பவும். பின்பு தயாரித்து வைத்திருக்கும் கறி மசாலாவை நடுவில் வைத்து பரப்பவும்.
கீழ்புறம் சிறிது பொன்னிறமாகிவிட்டால், மறுபக்கம் திருப்பி, 1 நிமிடம் மட்டும் வேக விடவும். அவ்வளவு தான் சுவையான கறி தோசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |