விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: எள்ளு பூர்ண கொழுக்கட்டை இப்படி செய்து பாருங்க... பஞ்சு போல் இருக்கும்
விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரும்பமான கொழுக்கட்டை செய்து படைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.
அப்படி ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரியாக கொழுக்கட்டை செய்யாமல் இந்த தடவை சற்று வித்தியாசமாக எள்ளு பூர்ண கொழுக்கட்டை இந்த முறையில் செய்து அசத்துங்க.
எள்ளு பூர்ண கொழுக்கட்டை எளிமையான முறையில் பஞ்சுபோல் மெது மெதுவென எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாவு பச்சரிசி - 150 கிராம்
தண்ணீர் - 2 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
நெய் - 1 தே. கரண்டி
பூரணம் செய்வதற்கு தேவையானவை
வெல்லம் - 1 டம்ளர்
தண்ணீர் - 1/4 டம்ளர்
வறுத்த வேர்க்கடலை - 3/4 டம்ளர்
எள்ளு - 3/4 டம்ளர்
ஏலக்காய் - 3
நெய் - 1 தே.கரண்டி
துருவிய தேங்காய் - 3/4 டம்ளர்
செய்முறை
முதலில் பச்சரிசியை நன்றாக இரண்டு மூன்று முறை கழுவி பச்சரிசி மூழ்கும் வரையில் தண்ணீர் ஊற்றி குறைந்தது 2 மணிநேரம் ஊறவிட வேண்டும்.
பின்னர் அரிசியில் உள்ள நீரை வடித்துவிட்டு அரிசியை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, 1/2 டம்ளர் நீரை ஊற்றி நன்றாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அந்த மாவில் இன்னும் 1 1/2 டம்ளர் நீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த மாவை ஊற்றி, தேவையானளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து, மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் வரையில் நன்றாக அழுத்தி விட்டு கிளறி வேக வைத்து இறக்கி, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூடி வைத்து, கை பொறுக்கும் சூட்டிற்கு வரும் வரையில் குளிட விட வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து, அத்துடன் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தை கரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி குளிரவிட வேண்டும்.
அதன் பின்னர் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளை சேர்த்து நல்ல மணம் வரும் வரையில் வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் வறுத்த வேர்க்கடலை, எள்ளு விதைகள் ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து இறக்கி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதே பாத்திரத்தில், நெய் ஊற்றி சூடானதும், துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக வாசனை வரும் வரையில் வருத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தயாரித்து வைத்துள்ள வெல்ல கரைசளை வடிகட்டி ஊற்றி, பொடித்து வைத்துள்ள எள்ளு பொடியையும் சேர்த்து கிளறிவிட்டு 2 தொடக்கம் 3 நிமிடங்கள் வேக வைத்து இறக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் கையில் எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மாவை சிறிது சிறிதாக எடுத்து உருட்டி தட்டையாக தட்டி, நடுவே எள்ளு பூர்ணத்தை வைத்து மடித்து மூடி, இட்லி தட்டில் வைத்து 10-15 நிமிடங்கள் வரையில் வேகவிட்டு எடுத்தால் அசத்தல் சுவையில் எள்ளு பூர்ண கொழுக்கட்டை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |