நாம் ஏன் குண்டாகிறோம்னு தெரியுமா? தீர்வுகளுடன் மருத்துவ விளக்கம்
நாம் ஏன் குண்டாகிறோம்? இந்த பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா முழுமையான விளக்கம் கொடுத்துள்ளார்.
அந்த பதிவு,
நாம் ஏன் குண்டாகிறோம்?
நம்மில் பலர் இதை அனுபவத்தில் உணர்ந்திருப்போம் நான்லாம் காலேஜ் படிக்கும் போது எவ்ளோ சிலிம்மா இருந்தேன் தெரியுமா ?? மேரேஜ்க்கு அப்பறமா தான் தொப்பை போட்டு குண்டாகிட்டேன் என்போம்.

ஏன் நாம் குண்டாகிறோம்? நாம் உட்கொள்ளும் உணவு முறை தான் வேறு என்ன இருக்க முடியும்? நாம் உட்கொள்ளும் உணவில் பிரச்சனை இருக்கிறதா? நம் தாத்தாக்கள் எல்லாம் இப்படி இருபது வயதிலேயே தொப்பை தள்ளி இருக்கவில்லையாமே.. நாம் மட்டும் ஏன் வயிற்றை வளர்க்கிறோம்?
நமது முன்னோர்கள்( நமக்கு முன் சென்ற சில தலைமுறைகள்) என்ன உணவு உண்டார்கள்? திணை, கைக்குத்தல் அரிசி, கம்பு, கேப்பை, எள்ளு, கொள்ளு என உண்டார்கள்.
அரிசியில் இட்லி செய்து சாப்பிடுவது எல்லாம் வருடம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தான். ஆனால் நாம் தினமும் அரிசியில் செய்யப்பட்ட இட்லி தோசை சாதம் என ஃபுல் கட்டு கட்டுகிறோம்.

அதோடு நில்லாமல் ஸ்நேக்ஸ் என்ற பெயரில் ரீபைன்டு சுகரில் செய்யப்பட்ட ஸ்வீட்ஸ், எண்ணெயில் பொறிக்கப்பட்ட வடை, பஜ்ஜிகள், புரோட்டாக்கள், பப்ஸ், சமோசா. காஸ்ட்லியான ஆட்களாக இருந்தால் பீட்ஸா, பர்கர், சேன்ட்விச், ஐஸ் கிரீம்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை.
நம் முன்னோர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
நம் முன்னோர்கள் வாழ்வதற்காக உணவு உண்டனர் , நாமோ உணவு உண்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் காலத்தில் இத்தனை எளியதாக உணவுகள் கிடைக்கவில்லை.
ஒவ்வொன்றுக்கும் அயராத உழைப்பைச் சிந்தி நாளின் முடிவிலே கிடைக்கும் ஒரு வேளை உணவாயினும் உண்டு உயிர் பிழைத்து வந்தனர். நாமோ அனுதினம் மூன்றிலிருந்து ஐந்து வேளை உணவுகளை பசியே எடுக்காமலும் சாப்பிட வேண்டுமே என்று சாப்பிடுகிறோம்.

அவர்கள் உண்ட உணவில் மாவுச்சத்தின் அளவுகள் மிகவும் குறைவாக இருந்தன ஆனால் நமது உணவில் மாவுச்சத்து மட்டுமே பிரதானமாக நிரம்பியிருக்கிறது.
என்றாவது நாம் யோசித்திருப்போமா?ஏன் தினமும் மூன்று வேளையும் சதா அரிசியில் செய்த உணவுகளையே தின்று வருகிறோம் என்று. நமது உடல் குண்டாவதற்கு காரணம் அது தான்.
ஆம் நாம் உண்பது அதிக மாவுச்சத்துள்ள உணவு முறை நம்மை குண்டாக்குவதற்கே படைக்கப்பட்ட ஹார்மோன் "இன்சுலின்" (insulin) பசி பஞ்சத்தில் இருந்து நம்மை காக்க நமக்கு அருளப்பட்ட அமிர்தம் இந்த இன்சுலின்.
இந்த இன்சுலின் என்ன செய்கிறது தெரியுமா?

மனிதன் அதிகமான மாவுச்சத்தை சாப்பிட்டால், அதை வைத்து சிறிதை கல்லீரலில் க்ளைகோஜனாகவும் பெரும்பகுதியை கொழுப்பாகவும் ( triglycerides) சேமிக்கிறது ஏன் இப்படி கொழுப்பை சேமிக்கிறது?வரப்போகும் பஞ்சத்தை நாம் தாக்குப்பிடிக்கும் விதமாக இந்த சேமித்த கொழுப்பு பயன்படும் என்ற நல்ல நோக்கத்தில் தான்.
உங்கள் கேள்வி புரிகிறது.. இப்போது தான் பஞ்சமே வருவதில்லையே?ஆம் நமக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டு சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பிறகும் ஏன்.. பஞ்சத்தில் அடிபட்டவனைப் போல மூன்று வேளையும் சதா கார்போஹைட்ரேட்டை தின்று கொண்டே இருக்கிறோம் ?

நமக்கு எதுக்கு இப்போது தேவையில்லாத கொழுப்பு? சரி விசயத்துக்கு வருவோம் இந்த தொப்பையில் உள்ள கொழுப்பானது நமது உடலில் கெட்ட கொழுப்பான ட்ரைகிளசரைடுகளை ஏற்றிவிடுகிறது.
மாவுச்சத்து திண்ண திண்ண இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கிறது. இன்சுலினை சுரக்கும் கணையத்தின் பீட்டா செல்கள் மூச்சுத் திணறுகின்றன.
நாகரிக மனிதனின் கண்டுபிடிப்பான "ரீபைன்டு சுகர்" எனப்படும் சீனி கணையத்தில் உள்ள இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்களை ஒரே அடியில் கொலை செய்தேவிடுகின்றன.
ஆம்.. ரீபைன்டு சுகர் சந்தைக்கு வந்ததும் தான் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது.
இந்த நீரிழிவு நோய்க்கு காரணம் நமது உடலில் சுரக்கும் இன்சுலின் வேலை செய்யாமல் போவது தான் இதைத் தான் "இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்" என்கிறோம்.

இன்சுலின் மட்டும் தான் காரணமா? இல்லை இன்னும் இரு ஹார்மோன்கள் இருக்கின்றன. முதல் ஹார்மோன் "க்ரெலின்" (GHRELIN) இரண்டாவது ஹார்மோன் " லெப்டின்" (LEPTIN) இந்த க்ரெலின் இருக்கிறானே இவனது வேலை பசியைத் தூண்டிக்கொண்டே இருப்பது | \/ வயிறு காலியானால் உடனே சுரக்கப்பட்டு, மூளைக்கு அலாரம் அடித்து பசிக்கான பகுதி தூண்டப்படும் (appetite center) , பசி எடுக்கும் | \/ நாம் பசி எடுத்ததும் சாப்பிடுவோம் வயிறு நிறையும் | \/ நமக்கு நிறைவு ஏற்பட்டு பசி அடங்கியதும், லெப்டின் சுரக்கப்படும்.
அது மூளையின் திருப்திக்கான பகுதியைத் தூண்டும்( satiety center) | \/ பசி அடங்கும் இதுதான் சரியான நடைமுறை ஆனால் குண்டாக இருப்பவர்களுக்கு (obese persons) , க்ரெலின் மட்டும் நன்றாக வேலை செய்வான்.

லெப்டின் மக்கர் செய்ய ஆரம்பிப்பான். ஏன் என்றால்.. லெப்டின் மூளைக்குச் சென்று திருப்திப் பகுதிக்குச் சென்று தனது வேலையைச் செய்வதை குண்டான மனிதரின் கொழுப்பான ட்ரைகிளசரைட்ஸ் தடுத்து விடுகின்றன. இதை "லெப்டின் ரெசிஸ்டெண்ஸ்" என்கிறோம்.
ஆகவே லெப்டின் வேலை செய்யாத நிலையில் , க்ரெலின் மட்டும் கொடுத்த காசுக்கு மேல் வேலை செய்து கொண்டே இருப்பதால் நாம் தொடர்ந்து உண்டு கொண்டே இருக்கிறோம். குண்டாகிறோம்.
இதில் இன்னொரு தகவல் யாதெனில் இந்த க்ரெலின் ,மாவுச்சத்தை உண்போருக்கு அதிகமாகவும் புரதச்சத்தையும் கொழுப்பையும் அதிகமான அளவு உண்போருக்கு குறைவாகவும் சுரக்கிறது.

கார்ப்ஸ் உண்பவர் அனுதினமும் பசியெடுத்து எதையாவது கொரித்துக் கொண்டே இருப்பதற்கும், கொழுப்புணவை உண்பவர் 20 மணிநேரம் விரதம் இருந்தாலும் அகோரப் பசி தோன்றாமல் இருப்பதற்கும் இது தான் காரணம்.
ஆகவே உணவில் மாவுச்சத்தின் அளவைக் குறைத்து , புரதத்தை தேவையான அளவு உண்டு, கொழுப்பை நன்றாக எடுத்துக்கொண்டால் தொப்பை கரையும் கொழுப்பை கொழுப்பால்தான் கரைக்க முடியும் நம்புங்கள்.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர் சிவகங்கை
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |