Vegetable Soup: நோய் எதிர்ப்பு சக்தியை தாறுமாறாக அதிகரிக்கும் வெஜிடபுள் சூப்
காய்கறிகளை கொண்டு செய்யப்படும் வெஜிடபுள் சூப்பின் செய்முறை இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காய்கறி சூப்
காய்கறி சூப் என்பது காய்கறிகள் மற்றும் இலைக் காய்கறிகளை முதன்மைப் பொருட்களாகப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சூப் ஆகும். பழங்கால வரலாற்றிலிருந்தே மக்கள் இதனை செய்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பொதுவாக உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
ஏனெனில் காய்கறிகளில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது என்று தெரிந்தும் அதிகமானோர் காய்கறிகள் என்றாலே அலறுவார்கள்.
ஆனால் காய்கறிகளை சாப்பிட பிடிக்காவிட்டால், அந்த காய்கறிகளைக் கொண்டு சூப் செய்து குடிக்கலாம். இதன் மூலமும் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைப்பதுடன், சுவையாகவும் இருக்கும்.
மேலும் காய்கறிகளை பொரியல், வறுவல், கூட்டு என்று வைத்து சாப்பிடுவதை விட சூப் செய்து சாப்பிடுவதால் முழுமையாக சத்துக்களை பெறலாம்.
உடம்பில் மெட்டபாலிசம் அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவும், உடல் எடையைக் குறைக்கவும் செய்கின்றது.
சூப்பில் இருக்கும் சத்துக்கள்
காய்கறிகள் மட்டும் சேர்த்த சூப் ஒரு கப்பில், 50 முதல் 100 கலோரிகள், கார்போஹைட்ரேட் 15 கிராம், நார்ச்சத்து 5 கிராம் இருக்கும்.
அத்துடன் நாம் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகள், சேர்க்கும் மற்ற பொருட்களைப் பொறுத்து அதில் உள்ள வைட்டமின்கள் சத்துகள் அமையும்.
பசியை கட்டுப்படுத்தும்
இன்று உடல் எடையைக் குறைப்பதற்கு பல வழிகளில் மக்கள் முயற்சித்து வருவதுடன், அதிகமான பணத்தையும் செலவழித்து வருகின்றனர்.
இதனால் சில தருணங்களில் பக்கவிளைவுகளும் ஏற்பட்டு, தேவையில்லாமல் புதிய நோய்களும் தாக்க ஆரம்பித்து விடுகின்றது. ஆனால் உடல் எடையைக் குறைப்பதற்கு காய்கறி சூப் அதிகமாக உதவி செய்கின்றது.
தினமும் குடித்து வருவதால், உடல் எடை குறைவதுடன், செரிமான மண்டலமும் வலுவடைகின்றது. அதாவது உணவு உண்பதற்கு முன்பு வெஜிடபிள் சூப்களை குடித்து வந்தால் உணவு விரைவில் செரிமானம் அடைகின்றது.
ஒரு கப் சூப் குடித்தால் வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகும். இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதுடன், நீண்ட நேரம் பசி ஏற்படாமலும் இருக்கும்.
இதனால் நீங்கள் அதிகமான உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பீர்கள். பசி உணர்வை உணர வைக்க நம் வயிற்றில் கிரெலின் என்ற ஹார்மோன் சுரந்து தெரியப்படுத்தும்.
ஆனால் நீங்கள் சூப் போன்ற உணவுகளை சாப்பிடும் போது, பசி கட்டுக்குள் இருக்கும். திட உணவை விட ஒரு கப் சூப் ஒன்றரை மணி நேரம் வரை உங்களை நீண்ட நேரம் முழு ஆற்றலோடு வைத்திருக்க உதவும் என்று ஆய்வுகளில் கூறப்படுகின்றது.
அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி
குளிர்காலத்தில் சூப் எடுத்துக் கொள்வது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். காய்கறிகளை சேர்த்து செய்யப்படும் சூப்பில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன.
குளிர்காலத்தில் ப்ரோக்கோலி, கீரை அல்லது உருளைக்கிழங்கு போன்ற வைட்டமின் சி அதிகம் உள்ள சூப்களைச் சேர்த்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்க்கிருமிகளுக்கு எதிராக பாதுகாக்கவும் உதவும்.
நுரையீரல் ஆரோக்கியத்திற்கு
சளி மற்றும் இருமல், சுவாசம் போன்ற நோய்த் தொற்றுகளுக்கு சூப் அருந்துவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. அதிலும், குறிப்பாக சிக்கன் சூப் அருந்துவது சளித் தொல்லையில் இருந்து விடுபட உதவும்.
நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றும். அதேபோல் உணவுக்கு முன் அல்லது குளிர் காலத்தில் சூப் எடுத்துக் கொள்வது குளிருக்கு இதமாக இருக்கும்..
ஒரு கப் சூடான சிக்கன் சூப் அருந்துவது சளியை வெளியேற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும், சைனஸுல் இருந்து காக்கவும் செய்கின்றது.
தேவையான பொருட்கள்
- கேரட் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
- பீன்ஸ் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
- பட்டாணி - கால் கப்
- ஸ்வீட் கார்ன் - கால் கப்
- முட்டைகோஸ் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
- வெங்காயம் - 1
- இஞ்சி - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
- பூண்டு - 3 பல்
- மிளகு தூள் - ஒன்றரை ஸ்பூன்
- சோள மாவு - ஒன்றரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - கப்
- வெங்காயத் தாள் - சிறிதளவு
- வெண்ணெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்பு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து பச்சை வாசணை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
பின்பு வதக்கிய காய்கறிக்குள் 3 கப் அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது கிளறிவிட்டு மூடி வைக்கவும்.
சுமார் 20 நிமிடங்கள் வேக வைத்த பின்பு தண்ணீர் 3 கப் 2 கப்பாக வற்றிய தருணத்தில் சூப் சற்று திக்காக இருப்பதற்கு சோளமாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்பு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காய தாள், மிளகுபொடி சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான காய்கறி சூப் தயார். தேவை ஏற்பட்டால் காரத்திற்கு சில்லி ப்ளாக்ஸ் சேர்த்து பரிமாறவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |