வயிறு உப்புசத்துக்கு தயிர் சிறந்த தீர்வா?
அனைவரும் தன் வாழ்நாளில் ஒரு தடவையாவது சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று வயிறு உப்புசம், வயிறு வீங்கியிருப்பதை போன்று இருந்தாலோ, அதீத வயிற்று வலியை உணர்ந்தாலோ வயிறு உப்புசம் என புரிந்து கொள்ளலாம்.
இதற்கு செரிமானமின்மை, அதிகப்படியான கார உணவுகளை உட்கொள்ளுதல், வாயு என பல காரணங்கள் உண்டு. எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலமே இதனை சரிசெய்து கொள்ளலாம்.
ஒரு சில நேரங்களில் தீவிரமான பாதிப்பாக மாறும்போது, மருத்துவரை அணுகுவது நல்லது.
என்ன காரணம்?
வயிற்றில் வாயு அதிகம் உருவாகி அதை வெளியேற்ற முடியாவிட்டால் வயிறு உப்புசம் ஏற்படுகிறது.
அதிகளவில் சாப்பிடுவது, மது அருந்துதல், அதிகப்படியான மருந்து, மாத்திரைகள், காரமான உணவுகள் போன்றவற்றால் செரிமான தொந்தரவுகள் ஏற்பட்டு வயிறு உப்பி இருக்கலாம்.
வயிற்றில் தொற்றுக்கிருமிகள் அதிகம் இருந்தாலும் வயிறு உப்பி இருக்கும், இத்துடன் காய்ச்சல், மலத்தில் ரத்தம், வாந்தி போன்ற தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை நாடவும்.
லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத நபர்களுக்கும், வயிற்றில் கெடுதல் தரும் பக்டீரியாக்களின் வளர்ச்சினாலும் கூட வயிறு உப்புசம் வரலாம்.
இதை எப்படி தடுப்பது?
அதிகம் சாப்பிடாமல் தேவைக்கு ஏற்ப, பசிக்கும் போது சாப்பிடவும், ருசிக்காக ஒருபோதும் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம்.
சாப்பிடும் போதும் உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும், அவசர அவசரமாக சாப்பிடும் போது காற்றை விழுங்கிவிட நேரிடும்.
உங்களுக்கு ஒவ்வாமை தரக்கூடிய உணவுகளை தவிர்க்கவும்.
தயிர் சிறந்த தீர்வா?
வயிறு உப்புசம் உட்பட செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தயிர் சிறந்ததாக பார்க்கப்படுகிறது.
காரணம் இதில் உள்ள புரோபயாடிக்குகள், இவை கெட்ட மற்றும் நல்ல பக்டீரியாக்கள் சமநிலையுடன் இருக்க தேவையான ஒன்று, இது தயிரில் அதிகம் இருப்பதால் தினமும் சாப்பிட்டு வருவது பலனை கொடுக்கும்.