பல நோய்களுக்கு அருமருந்தான திரிபலா சூரணம்! எப்போது எப்படி சாப்பிட வேண்டும்?
சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் திரிபலா எனும் சர்வநோய் நிவாரணி நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையாகும்.
சாதாரண வாய்ப்புண்ணிலிருந்து, வயிற்றுப்புண், குடல்புண் போன்ற பல பிரச்னைகளுக்கும், சர்க்கரை நோய், மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், மூட்டு வலி என பல நோய்களுக்கு அருமருந்தாகிறது.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடம்புக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து இருப்பதால் பல நன்மைகளை வாரிவழங்குகிறது.
கடுக்காய்
அறுசுவையில் உப்பைத் தவிர, பிற ஐந்து சுவைகளும் கொண்டதாக உள்ளது கடுக்காய்.
கடுக்காயின் விதைகள், நஞ்சு என்பதால், அவற்றை நீக்கிய பின்புதான் பயன்படுத்த வேண்டும்.
கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
தான்றிக்காய்
தான்றிக்காயை, கர்ஷம், அக்ஷம் என்பர். இதன் அடிமரம் பத்து அடிகள் அகலமும், உச்சிப்பகுதி 120 அடி வரைகூட வளரும் இயல்புடையதால், மஹாவிருக்ஷமாகக் (உயரியத் தாவரம்) கருதப்படுகிறது.
நுரையீரல் நோய்களுக்கு, பல முறைகளில் நோயாளிக்கு ஏற்ற வகையில், சித்தமருத்தவர்களால் மருந்தாகத் தரப்படுகிறது.
கெட்ட கொழுப்பை வேக வேகமாக கரைக்கும் அதி சக்திவாய்ந்த பானம்!
நெல்லிக்காய்
இதனை வயஸ்தா என்று அழைக்கின்றனர். வயஸ்தா என்று சொன்னால் மூப்படையாமல் காக்கச் செய்வது என்று பொருளாகும்.
இதற்குச் சிவா என்றும், பலம் என்றும், தாத்ரீ பலம், அமிர்தா என்றும் அழைப்பர். உப்புச்சுவை இல்லாதது. அதிக அளவில் வைட்டமின் சி, இதர ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன.
வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
நெல்லிக்காய் - 4 பங்கு, தான்றிக்காய் - 2 பங்கு, கடுக்காய் - 1 பங்கு அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.
நெல்லிக்காய், கடுக்காயை விதை நீக்கி பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றையும் நிழலில் காயவைத்து அரைத்து பொடியாக்கவும்.
கடுக்காய், தான்றிக்காய் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் என்றாலும் தயாரிக்க சிரமம் இருப்பவர்கள் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.
இரவில் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.
* மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் இரவு உணவுக்கு பிறகு, சாப்பிட்டு வர இது ஒரு சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு வயிற்றில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த கழிவுகளையும் வெளியேற்றி மலச்சிக்கலை குணமாக்கும்.
* மிக முக்கியமாக வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது.
* அத்துடன் உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்வதுடன் வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
* ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்து ரத்த சோகையை சரிசெய்யும், இதில் உள்ள கசப்பு சுவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதால் குளுகோஸின் அளவு சமநிலைப்படும்.
* உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும், தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது உங்கள் எடை குறைவதை கண்கூடாக பாரக்கலாம். ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதால் தொற்று நோய்கள் வராமல் தடுக்கும், சருமம் பளபளப்பாகும்.
* மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.
* உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.
ஆண்கள் தினமும் ஒரே ஒரு பேரிச்சம் பழம் சாப்பிடுங்க… நீரிழிவு நோயாளிகளே எச்சரிக்கை!
எப்போது எப்படி சாப்பிட வேண்டும்?
மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.
பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.
கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.
தப்பித்தவறி கூட இந்த உணவுகளை பச்சையாக சாப்பிடாதீங்க!
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
திரிபலா சூரணத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ள கூடாது. மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்களும் எடுத்துக் கொள்ள கூடாது.
இதேபோன்று குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என நினைப்பவர்கள் சித்த மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது நல்லது.
ஏதேனும் நோய்களுக்கு ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டு இருந்தால் ஒரு முறை சித்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின் பயன்படுத்தலாம்.
தினமும் இரவில் ஒரு கப் பால் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?