வஞ்சர மீன் வாங்கி நச்சுன்னு இப்படி குழம்பு செய்ங்க - டேஸ்ட் நாக்கிலே இருக்கும்
என்ன தான் இறைச்சி வகைகள் சாப்பிட்டாலும் கடல் வாழ் மீன்களை சாப்பிடுவது ஒரு தனி சுவை தான். அதிலும் மீன்களை அப்படியே பிடித்து அதை கழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவை மூன்று நாட்களுக்கு நாக்கிலே நிற்கும்.
இவை தவிர கடல் மீனில் பல சத்துக்கள் உள்ளன. கடல் மீன் சாப்பிடுவதால் மூளை மற்றும் இதய ஆரோக்கியம் மேம்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும், மேலும் வைட்டமின் D, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.
இது மனச்சோர்வை எதிர்த்துப் போராடவும், சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது, அதே நேரத்தில் கண் பார்வை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். பதிவில் வஞ்சர மீன் வைத்து ஒரு சுவையான குழம்பு செய்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மீனை ஊறவைக்க
- வஞ்சரம் மீன் - 1 கிலோ
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - 1.1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
வஞ்சரம் மீன் குழம்பு செய்ய
- நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1/2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 30 நறுக்கியது
- முழு சின்ன வெங்காயம் - 15
- பூண்டு - 15 பற்கள்
- பச்சை மிளகாய் - 3 கீறியது
- கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்து
- இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
- தக்காளி - 4 நறுக்கியது
- கல் உப்பு - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
- தனியா தூள் - 3 ஸ்பூன்
- கெட்டியான புளி கரைசல் - 1 கப்
- தண்ணீர் - 2 கப்
- கொத்தமல்லி - தேவையான அளவு.

செய்யும் முறை
முதலில் வஞ்சரம் மீனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டவும். ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் மீன் துண்டுகளை போட்டு 20–30 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் நல்லெண்ணெயை சூடாக்கவும். கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், முழு வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக நறுமணம் வரும் வரை வதக்கவும் . அதில் தக்காளியை சேர்த்து மிருதுவாகும் வரை வதக்கவும். இப்போது கல் உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர் புளி கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதிக்கத் தொடங்கியதும் ஊறவைத்த மீன் துண்டுகளை சேர்க்கவும். இதை மிதமான தீயில் 10–15 நிமிடம் வேக வைக்கவும். அவ்வளவு தான் கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |