நீங்களும் பூ போன்ற இட்லி செய்யலாம்! இந்த ஒரு பொருள மறக்காம சேர்த்திடுங்க
தமிழர்களின் காலை உணவில் பெரும்பாலும் இடம்பிடிக்கும் பொருள் இட்லி தான், சுடச்சுட இட்லியுடன் சாம்பார், சட்னி வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதியானது.
6 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை, உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு இட்லி, ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதால் எளிதில் செரிமானம் ஆகிவிடும்.
பல நன்மைகளை தன்னுள் அடக்கியுள்ள இட்லியை பஞ்சு போல சுடுவது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி- 4 கப்
உளுந்து- 1 கப்
ஜவ்வரிசி- 1/2 கப்
வெந்தயம்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் இட்லி அரிசி, ஜவ்வரிசியை நன்றாக கழுவிவிட்டு 4 லிருந்து 5 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
உளுந்தை நன்றாக அலசிவிட்டு, சிறிது வெந்தயம் கலந்து ஊறவைத்துக் கொள்ளவும், வெந்தயம் 8 லிருந்து 10 வரை சேர்த்தால் போதுமானது.
நீங்கள் விரும்பாவிட்டால் வெந்தயம் சேர்க்காமலும் இட்லி மாவு அரைக்கலாம்.
அரிசி, உளுந்து நன்றாக ஊறிய பின்னர், முதலில் உளுந்து நன்றாக அரைத்துக் கொள்ளவும், சுமார் 20- 30 நிமிடங்கள் வரை ஆட்டினால் உளுந்து நன்றாக பொங்கி வரும், சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அரிசி, ஜவ்வரிசியை ஆட்டவும், இதனை உளுந்து மாவுடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
இட்லி மாவை சுமார் 8 மணிநேரங்கள் புளிக்கவைத்து விட்டு, இட்லி ஊற்றினால் மிகவும் மெதுவான பூ போன்ற இட்லி தயாராகிவிடும்!!!