நீரிழிவு நோயாளிக்கு மருந்தாகும் கருப்பு உளுந்து புட்டு செய்வது எப்படி? 7 நிமிடங்கள் வேக வைத்து எடுங்க!
ஆரோக்கியமான உணவுகளில் கருப்பு உளுந்து புட்டும் ஒன்று. ஏராளமான நன்மைகள் மிகுந்த கருப்பு உளுந்தை நாம் தோல் நீக்கிவிட்டு தான் பயன்படுத்துகின்றோம்.
உண்மையில் உளுந்தை தோளோடு சேர்த்து பயன்படுத்தினால் தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.
கருப்பு உளுந்தை தோளோடு சேர்த்து உளுந்து களி,லட்டு, பாயசம், வடை, கஞ்சி, சாதம் , உளுந்துக் கஞ்சி என்று பல வகை உணவுகள் தயாரிக்கலாம்.
இதில் அதிக அளவில் கால்சியம் பாஸ்பரஸ் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் இருப்பதால் இடுப்பு எலும்புகள் வலுவாகும். நீரிழிவு நோய் ஏற்பட்டவர்கள் நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து நாம் சாப்பிடும் எந்த வகையான உணவுகளிலும் இருக்கும் சத்துக்களை சரி செய்து, உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவுகிறது.
அந்த வகையில் இன்று நாம் சுவையான கருப்பு உளுந்து புட்டு செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து பயறு 2 கப் (தோராயமாக 200 கிராம்)
- பச்சரிசி மாவு 2 கப்
- தேங்காய் துருவல் 2 கப்
- நாட்டுச் சர்க்கரை 2 கப்
- உப்பு சிறிதளவு
- ஏலக்காய் 3 எண்ணம்
கருப்பு உளுந்து புட்டு செய்முறை
கருப்பு உளுந்து மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
கருப்பு உளுந்து பயறு கருப்பாக இருப்பதால் வறுபட்டது தெரியாது. உளுந்தம் பயறின் வறுக்கும் வாசனை வறுவதோடு, ஏலக்காய் சூட்டில் வெடிக்கும். அப்போது அடுப்பில் இருந்து உளுந்தம் பயறினை இறக்கி விடவும்.
கருப்பு உளுந்து பயறு மற்றும் ஏலக்காய் ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கருப்பு உளுந்து பயறு மாவுடன் பச்சரிசி மாவினைச் சேர்க்கவும்.
அத்துடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். அதனுடன் நாட்டுச் சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக ஒருசேர கலக்கவும். பின்னர் இக்கலவையை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளவும். அரை டம்ளர் அளவு தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
கொதி நீரை சிறிது சிறிதாக மாவில் சேர்த்துக் கிளறவும். எல்லா மாவிலும் தண்ணீர் படும்படி நன்கு கிளறவும். மாவு பிடித்தால் பிடிக்கவும், உதிர்த்தால் உதிரும்படி இருக்கும் பக்குவத்தில் இருக்க வேண்டும்.
சிறிய கிண்ணம், டம்ளர், குழிக்கரண்டி ஏதேனும் ஒன்றில் மாவினை அடைத்து அச்சு வைக்கவும். இவ்வாறாக எல்லா மாவினையும் அச்சு வைக்கவும். இட்லி பாத்திரத்தில் மாவு அச்சுக்களை வைத்து 7 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான கருப்பு உளுந்து புட்டு தயார்.