AI போலி விளம்பரங்கள்: ரூ.15 கோடி இழப்பீடு கோரி நீதிமன்றம் சென்ற நடிகை ஸ்ருதி ஹாசன்!
Shruti Haasan : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், பிரபலங்களின் புகைப்படங்கள், குரல் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்தி போலி விளம்பரங்கள் உருவாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக நடிகை ஸ்ருதி ஹாசன் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் வழக்கு
தனது பெயர், புகைப்படம் மற்றும் அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்தி, ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் போலி விளம்பரங்கள் வெளியிடப்படுவதாகக் குற்றம்சாட்டி, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஸ்ருதி ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்ட நற்பெயர் மற்றும் வணிக மதிப்பு பாதிப்புக்காக ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபலங்கள் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை பரிந்துரைப்பது போலவும், அவர்கள் நடித்ததே இல்லாத விளம்பரங்களில் தோன்றுவது போலவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் போலி விளம்பரங்கள் பரப்பப்படுகின்றன.

இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, பிரபலங்களின் நற்பெயர் மற்றும் வணிக மதிப்பும் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல்கள் இணையத்தில் எளிதாகக் கிடைப்பதால், அவற்றை பயன்படுத்தி போலி விளம்பரங்களை உருவாக்குவது மேலும் எளிதாகியுள்ளது.அந்த வகையில், இந்த மோசடியின் சமீபத்திய பாதிக்கப்பட்டவராக நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளார்.

இதற்கு முன்பும் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் சல்மான் கான் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள், தங்களது பெயர் மற்றும் அடையாளத்தை அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடுக்க நீதிமன்றங்களை நாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |