சன்டே ஸ்பெஷல் : அஸ்ஸாம் பாணியில் அசத்தல் சிக்கன் குழம்பு... ரெசிபி இதோ!
ஞாயிற்றுக்கிழமை என்றாலே பல வீடுகளில் அசைவ விருந்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, சிக்கன் இல்லாமல் ஞாயிறு மதிய உணவு முழுமையடையாது என்று நினைப்பவர்களும் ஏராளம்.
வாரம் முழுவதும் வேலை, பள்ளி என பரபரப்பாக இயங்கும் குடும்பத்தினர், ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ஒன்றாக அமர்ந்து ருசித்து மகிழ்வது ஒரு சிறிய கொண்டாட்டமாகவே மாறிவிடுகிறது.

அப்படியிருக்க, இந்த ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கத் திட்டமிட்டுள்ளீர்களா? வழக்கமாகச் செய்யும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் அல்லது சிக்கன் 65 போன்ற உணவுகளுக்குப் பதிலாக, இந்த முறை சற்று வித்தியாசமான சுவையில் குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தலாம்.
அதிக சிரமமின்றி, வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடிய மணமணக்கும், சுவையான அஸ்ஸாம் சிக்கன் குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அரை கிலோ சிக்கன்
2 உருளைக்கிழங்கு
2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
3 வெங்காயம் ( நறுக்கியது)
4 ஸ்பூன் எண்ணெய்
ஒரு சிட்டிகை சர்க்கரை
தேவையான அளவு உப்பு
5 காய்ந்த மிளகாய்
3 பச்சை மிளகாய் (கீறியது)
1 ஸ்பூன் மஞ்சள் தூள்
2 ஸ்பூன் மிளகாய் தூள்
4 ஸ்பூன் தயிர்
1 ஸ்பூன் கரம் மசாலா
1 ஸ்பூன் சிக்கன் மசாலா
நறுக்கிய கொத்தமல்லி (சிறிதளவு)

செய்முறை
முதலில் சிக்கனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். சிக்கனுடன் மஞ்சள் தூள், சிக்கன் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாகப் பிரட்டி, சுமார் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் ஒரு சிட்டிகை சர்க்கரை, காய்ந்த மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
வதக்கிய வெங்காயத்தை அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும். பின்னர் அதனுடன் தயிரைச் சேர்த்து, கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

அதே பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, ஊறவைத்த சிக்கனைச் சேர்க்கவும். அதிக தீயில் சிக்கன் நன்றாக வதங்கி பொன்னிறமாகும் வரை கிளறிக்கொண்டே சமைக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து, சிக்கனிலிருந்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். சிக்கன் பாதியளவு வெந்ததும், வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் அரைத்த வெங்காயம்-தயிர் விழுதைச் சேர்த்து நன்றாகக் கலந்து, சுமார் 15 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
கெட்டியான கிரேவி பதம் வேண்டுமென்றால் ஒரு கப் தண்ணீர் மட்டும் சேர்த்து, மிதமான தீயில் நன்றாகக் கொதிக்கவிடவும். சிக்கன் நன்றாக வெந்ததும், இஞ்சி-பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் மற்றும் கரம் மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
மேலும் சில நிமிடங்கள் வேகவிட்டு இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி, அடுப்பை அணைத்தால் அவ்வளவு தான் அஸ்ஸாம் பாணியில் அசத்தல் சிக்கன் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |