அம்மாவுடன் முதல் படம்... ஹீரோயினாக அறிமுகமாகும் ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி!
தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி, கன்னட திரைப்படமான 'புல்லி' மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்.
ஹீரோயினாகும் தேஜலட்சுமி
இந்த டார்க் காமெடி படத்தில் புவன் பொன்னண்ணா ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அனுப் ஆண்டனி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், ஊர்வசியும் அவரது மகள் தேஜலட்சுமியும் முதல் முறையாக ஒரே படத்தில் இணைந்து நடித்திருப்பதுதான்.

மேலும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர்வசி கன்னட சினிமாவுக்கு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரும்பியுள்ளார். இதில் அவர் ஹீரோவின் தாயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டாக்டர் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து கண்டீரவா ஸ்டுடியோவில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

மகளின் அறிமுகம் குறித்து பேசிய ஊர்வசி,
"கதை கேட்டவுடன் மிகவும் பிடித்துவிட்டது.இந்த வாய்ப்பை தவறவிட்டிருந்தால் அது பெரிய இழப்பாக இருந்திருக்கும். என் மகள் தேஜா இந்தப் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமாகிறாள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி," என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் படிப்பை முடித்துள்ள தேஜலட்சுமி, கார்ப்பரேட் துறையில் பணியாற்றி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக இந்த வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள 'புல்லி', தாய்–மகன் உறவை மையமாகக் கொண்ட டார்க் காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது.

ஊர்வசியின் மகள் திரையுலகில் அறிமுகமாகும் இந்தப் படத்திற்காக கன்னட மற்றும் மலையாள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஊர்வசியின் மகள் என்பதால், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த தலவல் பெரிதும் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |