வெங்காயம் தக்காளி இல்லாமல் வேர்க்கடலை கார குழம்பு
Peanut Kara Kuzhambu Recipe: வெங்காயம், தக்காளி இல்லாமல் வேர்க்கடலையை வைத்து கார குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வீட்டில் மதிய உணவிற்கு குழம்பு வைப்பது தான் குடும்ப தலைவிகளுக்கு குழப்பத்தினை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. சாம்பார், குருமா, புளிக்குழம்பு என்று வைத்து சாப்பிட்டிருப்போம்.
சில வேலையில் கத்தரிக்காய் காரக்குழம்பு, வெங்காய காரக்குழம்பு செய்திருப்போம். ஆனால் இவற்றிற்கு வெங்காயம், தக்காளி கட்டாயம் சேர்த்து தான் செய்து சாப்பிடுவோம்.
ஆனால் சற்று வித்தியாசமான வெங்காயம், தக்காளி சேர்க்காமல் வேர்க்கடலை காரக்குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 1 கப்
புளி கரைசல் - ½ கப்
வெந்தயம் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி இலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ½ ஸ்பூன்
கடலைப் பருப்பு - ½ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
வெல்லம் - ½ ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைக்க வேண்டியவை
வர மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
மல்லி விதைகள் - ½ ஸ்பூன்

செய்முறை
நிலக்கடலையை கழுவி தோல் நீக்கி, மென்மையாக வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும். கடாய் ஒன்றில் மல்லி விதை, வரமிளகாய், தேங்காய் இவற்றினை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
வறுத்த கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மீண்டும் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்ச் சேர்த்து கடுகு சேர்த்து தாளிக்கவும். பின்பு கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் வேக வைத்த நிலக்கடலை, உப்பு, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிட வேண்டும். இதனுடன் புளிகரைசலைச் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்பு வெல்லம் மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியாக கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பினை இறக்கினால் வேர்க்கடலை காரக்குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |