அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமமா? உங்கள் இதயம் விடுக்கும் எச்சரிக்கையாக இருக்கலாம்!
Don't Ignore Breathlessness - It Could Be a Serious Health Warning : மூச்சு விடுவது என்பது நமது உடல் இயல்பாகச் செய்யும் ஒரு முக்கியமான செயலாகும். ஆனால் சில நேரங்களில் போதுமான அளவு காற்றை உள்ளிழுக்க முடியாதது போன்ற உணர்வு பொரும்பாவானவர்களுக்கு ஏற்படும்.
மூச்சு வாங்குவதில் சிரமம், மூச்சை முழுமையாக இழுக்க முடியாமை, அல்லது சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். இதையே நாம் பொதுவாக மூச்சுத்திணறல் என்கிறோம்.

மூச்சுத்திணறல் என்பது தனியாக ஒரு நோய் அல்ல. மாறாக, உடலில் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகின்றது. இது குறித்து விரிவான மருத்துவ விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்
மூச்சுத்திணறல் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமானவை.
இதயம் தொடர்பான பிரச்சினைகள்: இதயம் சரியாகச் செயல்படாதபோது உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான அளவு ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை அனுப்ப முடியாமல் போகலாம். இதனால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற நாம் வேகமாக மூச்சு விட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மாரடைப்பு (Heart Attack). இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் நெஞ்சுவலி (Angina). இதயச் செயலிழப்பு (Heart Failure). இதய வால்வுகளில் ஏற்படும் பாதிப்புகள்.
இதயத் துடிப்பில் ஏற்படும் சீரற்ற மாற்றங்கள் (Arrhythmia). குறிப்பாக இதயச் செயலிழப்பு உள்ளவர்களுக்கு நுரையீரலில் திரவம் தேங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.இதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். சிலருக்கு படுக்கும்போது மூச்சுத்திணறல் அதிகமாகவும் இருக்கலாம்.

நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள்: நுரையீரலின் செயல்பாட்டைப் பாதிக்கும் நோய்களும் மூச்சுத்திணறலை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக: ஆஸ்துமா (Asthma). நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD). நுரையீரல் அல்லது மார்புப் பகுதியில் ஏற்படும் தொற்றுகள்.
மேலும், அதிகப்படியான மனப்பதற்றம் மற்றும் கவலை காரணமாகவும் சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கும், குறிப்பாக கர்ப்பத்தின் இறுதிக் காலத்தில் குழந்தையின் வளர்ச்சி காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். இருப்பினும், இது குறித்து சந்தேகம் இருந்தாலோ வேறு அறிகுறிகள் தென்பட்டாலோ மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

மூச்சுத்திணறலில் இரண்டு முக்கிய வகைகள்
1.மூச்சுத்திணறலைப் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 1. நீண்டகால மூச்சுத்திணறல் (Chronic Breathlessness) தினமும் அல்லது அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுவதை நீண்டகால மூச்சுத்திணறல் என்கிறோம். உதாரணமாக, இதயச் செயலிழப்பு உள்ளவர்களுக்கு மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தாலும் சில நேரங்களில் மூச்சுத்திணறல் தொடர்ந்து இருக்கலாம்.
2. திடீர் மூச்சுத்திணறல் (Acute Breathlessness) எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென மூச்சு விடுவதில் கடுமையான சிரமம் ஏற்படுவதைத் திடீர் மூச்சுத்திணறல் என்கிறோம்.
இது இதயப் பிரச்சினைகள், இதயத் துடிப்பு சீரற்ற நிலை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளால் ஏற்படலாம். மேலும், உடற்பயிற்சி செய்யும்போது, படிக்கட்டுகளில் ஏறும்போது அல்லது சிறிது தூரம் நடக்கும்போதுகூட வழக்கத்தைவிட அதிகமாக மூச்சு வாங்கினால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.
குறிப்பாக இதற்கு முன்பு இவ்வாறான பிரச்சினை இல்லாதவர்களுக்கு புதிதாக இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டறிவது அவசியம்.

மனப்பதற்றத்தாலும் மூச்சுத்திணறல் ஏற்படுமா?
அதிகப்படியான பயம், கவலை மற்றும் மனப்பதற்றம் காரணமாகவும் மூச்சுத்திணறல் ஏற்படலாம். இதனால் இதயத் துடிப்பு அதிகரித்து, மூச்சு வேகமாகச் செல்லலாம். சிலருக்கு இது பீதி தாக்கமாக (Panic Attack) மாறக்கூடும்.
இதன்போது இதயத் துடிப்பு அதிகரித்தல், தலைசுற்றல், வியர்வை, உடல் நடுக்கம், குமட்டல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இத்தகைய நேரங்களில் பதற்றத்தைக் குறைத்து, மெதுவாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவது உதவியாக இருக்கும்.
இருப்பினும், மூச்சுத்திணறல் மனப்பதற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது என முடிவு செய்யாமல், இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் உள்ளனவா என்பதை மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்வது அவசியம்.

எப்போது உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்?
மூச்சுத்திணறல் ஏற்படும்போது அதன் தீவிரத்தைக் கவனிப்பது மிகவும் முக்கியம். பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.
மூச்சு விட முடியாமல் கடுமையான சிரமம் ஏற்படுதல். மூச்சுக்காகத் திணறுதல் அல்லது காற்றைப் பிடிக்க முடியாமல் தவித்தல். மூச்சுத்திணறலுடன் நெஞ்சுவலி ஏற்படுதல். திடீரென மூச்சு விடுவதில் கடுமையான மாற்றம் ஏற்படுதல்.
போன்ற அறிகுறிகள் மாரடைப்பு உள்ளிட்ட தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறிகளாக இருக்கலாம்.இவ்வாறான அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியம் செய்யாது உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியமாகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |