பாசிப்பருப்பு இருந்தா போதும்... பத்தே நிமிடத்தில் மொறு மொறு Ribbon பக்கோடா எப்படி செய்வது?
பொதுவாகவே வீட்டில் குழந்தைகள் இருந்தால் மாலை நேரத்தில் கட்டாயம் ஏதாவது மொறுமொறுப்பாக சாப்பிட கேட்பார்கள். இவர்களுக்கு கடைகளில் துரித உணவுகளை வாங்கி கொடுப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும்.
அதற்கு என்ன தீர்வு என்று சிந்திக்கின்றீர்களா? ஒரு கப் பாசிப்பருப்பு இருந்தாலே போதும் வீட்டிலேயே ஆரோக்கியமாக முறையில் எளிமையா ரிப்பன் பக்கோடாவை செய்தால், ஒரு வாரம் வரையில் வைத்து சாப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் அட்டகாசமான சுவையில் ரிப்பன் பக்கோடாவை எவ்வாறு செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1 கப்
தண்ணீர் - 3 கப்
பச்சரிசி மாவு - 4 கப்
எள்ளு - 1 மேசைக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
பெருங்காயத் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தே.கரண்டி
தண்ணீர் - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் பாசிப்பருப்பை நன்னறாக இரண்டு முறை கழுவி சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, 3 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் வரும் வரையில் நன்றாக வேக வைத்து இறக்கிக்கொள்ள ஆறவிட வேண்டும்.
ஆறிய பின்னர் குக்கரைத் திறந்து, பாசிப்பருப்பை ஒரு கரண்டியால் நன்றாக மென்மையாகும் வரையில் மசித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்து, அதனுடன் எள்ளு விதைகள், சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து கைகளால் ஒருமுறை நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதன் பின்பு மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து நீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மிகவும் கெட்டியான தன்மையில் இருந்தால், சிறிது நீரைத் தெளித்து, நன்கு மென்மையாக பிசைந்து எடுக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், மிதமான தீயில் வைத்துவிட்டு, முறுக்கு பிழியும் உலக்கில் ரிப்பன் பக்கோடா அச்சை வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து நிரப்பி, பின் நேரடியாக எண்ணெயில் பிழிந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நன்றாக பொரியவிட்டு 1 நிமிடம் கழித்து, பக்கோடாவை திருப்பிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து பொரித்து எடுத்தால் சுகாதாரமான முறையில் வீட்டிலேயே செய்த சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |