இயற்கையோடு பயணிப்போம்...
இயற்கையானது இறைவன் நமக்கு கொடுத்த வரம். சல சல சத்தத்துடனான நீரோடைகள், காற்றின் திசைக்கு நடனமாடும் மரங்கள் என இயற்கையை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் தேவையில்லை.
இயற்கையை நாம் அனுபவிக்க வேண்டும். அதன் அழகையும் நமக்கு கொடுக்கும் நன்மைகளையும் ஏற்றுக்கொண்டு அதற்கு நாம் மறு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவற்றை அழிப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொண்டுவிடக் கூடாது.
image - Wallpapers.com
இயற்கையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் உள்ளன. அதாவது மரத்தை எடுத்துக்கொண்டால், நமக்கு காய்,கனி, நிழல் என்பவற்றை இலவசமாக கொடுக்கின்றது. எதையும் வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்று வஞ்சகம் செய்வதில்லை.
அதேபோல் ஓடும் ஆறும், நீர்வீழ்ச்சிகளும் யார் வேண்டுமானாலும் வந்து நீர் அருந்திவிட்டுச் செல்லலாம் அனைவருக்கும் இலவசம் என்று தனது பெருந்தன்மையைக் காட்டுகின்றது.
மேலும் எறும்பு போன்ற சிறு சிறு உயிரினங்களிடமிருந்து கடின உழைப்பையும் சுறுசுறுப்பையும் கற்றுக்கொள்ள முடிகிறது. இவ்வாறு இயற்கை நமக்கு நிறையவே பாடம் புகட்டக்கூடியது.
image - istock
காலம் மாறி வருகின்றது..செயற்கையான பல பொருட்கள் நம்மைச் சுற்றி வந்துவிட்டன. அவற்றுடன் பழகவும் பயன்படுத்தவும் ஆரம்பித்துவிட்டோம். இருப்பினும் இயற்கைக்கு ஈடாக எந்தவொரு விடயமும் வரமுடியாது.
ஏனென்றால் இயற்கையின் மகத்துவமும் தனித்துவமும் அவ்வாறானது. நகரத்தில் வாழ்பவர்களுக்கு பெரிதாக இயற்கையின் ஸ்பரிசம் கிடைத்திருக்காது. விடுமுறை நாட்களில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு போய் வந்தால், அது நமது மனநிலைக்கு கொஞ்சம் ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருக்கும்.
இயற்கையின் நிறமான பச்சை மனதுக்கு ஒரு இதமான உணர்வை அளிக்கவல்லது. அதுமட்டுமில்லாமல் அதிலிருந்து கிடைக்கும் இயற்கையான காற்று நமக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
image - Toppr
என்னவொரு துயரமான விடயம் என்றால், நம்மில் பலர் இயற்கையை ரசிப்பதை விட அதை அழிப்பதையே செய்து வருகின்றனர். காடழிப்பு, நீர் நிலைகளில் அசுத்தங்களை போட்டு நாசமாக்குதல் என்று தொடர்ச்சியான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
உண்மையில் இதுபோன்ற செயற்பாடுகளால் எதிர்கால சந்ததியினர் பெரும் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதே நிதர்சனமான உண்மை. எனவே முடியுமானவரை இயற்கையை ரசிப்போம், பாதுகாப்போம், இயற்கையோடு பயணிப்போம்!
image - Flickr
இயற்கையின் அழகையும் மதிப்பையும் தனித்துவத்தையும் பறைசாற்றும் விதமாக சில கவிதை வரிகள் இதோ...
- இயற்கை அழகுதான் எத்தனை யுகம் கடந்தாலும் அழியா வரம் பெற்ற இறைவனின் அற்புத படைப்பு!
- இயற்கை எப்போதும் யாரையும் சார்ந்து இருப்பதில்லை, அதற்கு எது தேவையோ அது நிறைவேற்றிக் கொள்ளும்.
- இதயத்தின் துடிப்பில் மனிதன் வாழ்வதில்லை..மரங்களின் பிடிப்பிலே மனிதன் வாழ்கின்றான்!
- இந்த உலகில் நிரந்தரமானது என்றால், அது இயற்கையும் இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே.
- நான் விடும் மூச்சு காற்றில் தான் நீ வாழ்கிறாய். என்னை அழிப்பது உன்னை நீயே வதைப்பதற்கு சமம் - மரம்
- மரங்களையும் செடிகளையும் அழிப்பீர்கள். விரைவில் மனித வாழ்க்கையின் முழு சுழற்சியும் முடிவுக்கு வரும்.
- பிரித்துப் பார்த்து நேசம் காட்டாத ஒன்று இயற்கை மட்டும்தான்.
- இயற்கை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பரிசு. இயற்கையை காப்போம். நல்ல இயற்கையை விட்டு செல்வோம்..அடுத்த தலைமுறைக்கு பரிசாக..!
- நீ அழைத்தால் மழை வராது..ஆனால் மரம் அழைத்தால் மழை வரும்.
- காற்றின் சிக்கனம் தென்றல்..காற்றின் ஆடம்பரம் சூறாவளி.
- மாலையில் மரணம் என்று தெரிந்தும்..காலையில் கண்ணீர் வடிப்பதில்லையே மலர்கள்!
- தனக்குத்தானே குழி பறித்து கொள்கிறான் மனிதன்! இயற்கையை அழித்து!
- ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. நல்லது செய்தால் நல்லதே நடக்கும். இயற்கையும் அப்படித்தான்.
image - The Dispatch