ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் மட்டன் குழம்பு: மதுரை பாணியில் எப்படி செய்வது?
பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு அசைவ உணவுகள் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதிலும் மட்டன் என்றால் அலாதி பிரியம்.
மேலும் மட்டன் சாப்பிடுவது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும். அதில் அதிகளவு இரும்புச்சத்து காணப்படுவதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் மட்டன் துணைப்புரிகின்றது.
குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதில் மட்டன் பெரும் பங்கு வகிக்கின்றது. இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட மட்டனை வைத்து மதுரை பாணியில் அட்டகாசமான சுவையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் கறி எலும்புடன் -1/2 kg
தக்காளி பெரியது -2
சின்ன வெங்காயம் - நறுக்கியது1 கப் அளவு
கசகசா - 2 மேசைக்கரண்டி
சீரகம் -2 மேசைக்கரண்டி
குழம்பு மசாலா பொடி -2 மேசைக்கரண்டி
கருவேப்பிலை -சிறிது
கொத்தமல்லி -சிறிது
தேங்காய் -1/2 மூடி
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் கசகசா மற்றும் சீரகத்தை அம்மியில் நன்றாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாகவே அசைவ உணவுகளை சமைக்கும் போது அம்மியில்தான் மசாலாவை அரைப்பார்கள். அம்மியில் அரைத்தால் குழம்பின் சுவை இன்னும் அதிகரிக்கும்.
பின்னர் அதனுடன் 5 சின்ன வெங்காயத்தையும் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மட்டனை நன்றாகக் சுத்தம் செய்து நன்றாக கழுவி அரைத்த மசாலா , தக்காளி , இஞ்சி பூண்டு பேஸ்ட், குழம்பு மசாலாப்பொடி உப்பு ஆகியவற்றை சேர்த்து குக்கரில் 5 விசில் வரும் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.
மட்டன் நன்றாக வெந்ததும் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணை ஊற்றி சோம்பு ,கறிவேப்பிலை ,வெங்காயம் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து தேங்காய்ப்பால் ஊற்றி சிறிதளவு கொதிக்க விட வேண்டும்.எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லியை தூவி இறக்கினால் மதுரை பாணியில் மணமணக்கும் மட்டன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |