மாதுளம் பழத்தில் ஜாம் செய்து சாப்பிட்டதுண்டா? ருசியோ அலாதியானது
பொதுவாகவே பழங்களில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில் மாதுளம் பழத்தை எடுத்துக் கொண்டால், அதில் அதிகளவான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகமாக காணப்படுகிறது.
இதில் உள்ள சத்துக்களினால் இரத்த சோகை தடுக்கப்படுகிறது. புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
அந்த வகையில் பார்த்தால் குழந்தைகளை பழம் உண்ண வைப்பது மிகவும் சிரமம். ஆனால் ஜாம் போன்றவற்றை விரும்பி உண்பர்.
அவ்வாறு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இதில் ஜாம் செய்து கொடுக்கலாம்.
இனி மாதுளம் பழ ஜாம் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மாதுளை முத்துக்கள் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
எலுமிச்சைப் பழம் - 2
எவ்வாறு செய்வது?
முதலாவதாக மாதுளையை உதிர்த்து முத்துக்களை எடுத்துக்கொண்டு அதற்கு சம அளவாக சர்க்கரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மாதுளை முத்துக்களை மிக்சியில் முழுதாக அரைந்து விடாமல் லேசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கடுத்ததாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரைத்தெடுத்த மாதுளை முத்துக்களை சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்களுக்கு கிளறிக்கொள்ளவும்.
அதன் பின்னர் அதனுடன் சர்க்கரையை சேர்த்துக் கிளறி, சர்க்கரை நன்றாக கரைந்து மாதுளை முத்துக்களோடு சேர்ந்து வரும்பொழுது எலுமிச்சை சாற்றைப் பிழிந்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.
குறித்த கலவையிலுள்ள தண்ணீர் நன்றாக வற்றி, பிசுபிசுப்பு பதம் வரும் வரையில் கிளறவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். தித்திப்பான மாதுளை ஜாம் ரெடி.