சளி இருமலை அடித்து விரட்டும் கற்பூரவள்ளி இலை சட்னி - இப்படி செய்து பாருங்க
மழைக்காலத்தில் பொதுவாகவே எளிதில் குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
இதற்கு நாம் சமைக்கும் உணவில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
சமைக்கும் உணவுப் பொருட்களில் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் வகையிலும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையிலும் சில பொருட்களை சேர்க்க வேண்டியது அவசியம்.
அதற்கேற்ற வகையில் இன்று கற்பூர வள்ளி இலைகளை கொண்டு சட்னி செய்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கற்பூரவல்லி இலை - 12 அல்லது 15
- தேங்காய் - ½ மூடி
- கடலைப் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்
- மிளகு - 1 டீ ஸ்பூன்
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- பூண்டு - 6 அல்லது 8 பல்
- பச்சை மிளகாய் - 2
- வர மிளகாய் - 2
- சின்ன வெங்காயம் - 12 அல்லது 15
- புளி - சிறிதளவு (சிறிய நெல்லிக்காய் அளவு)
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
கற்பூரவல்லி இலைகளை உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்றாக அலசி மண் இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தேங்காயை துருவி ஒரு அளவாக எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். அதனுடன் சீரகம், மிளகு, பச்சை மிளகாய், வர மிளகாய், புளி, தோலுரித்து வைத்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
பின் கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்த கொத்தமல்லி இலை மற்றும் கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து லேசாக வதக்கவும். பின் கடைசியாக தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

நன்றாக ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து அரைத்து எடுத்தால் சளியை விரட்டும் ஆரோக்கியமான கற்பூரவல்லி சட்னி தயார். இது இட்லி, தோசை மற்றும் சாதம் என அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |