ஞாயிறு சமையலை அமர்களப்படுத்த வேண்டுமா? அப்போ சிக்கனுடன் கறிவேப்பிலை சேர்த்து “இந்த” ரெசிபி செய்ங்க
வழக்கமாக ஞாயிற்றுகிழமை வந்து விட்டாலே அசைவ உணவுகளின் வாசணை ஒவ்வொரு வீடுகளிலும் மணமணக்கும். அதிலும் குறிப்பாக சிக்கன் ரெசிபி இல்லாத வீடுகளே பார்க்க முடியாது.
சிக்கன் மற்ற இறைச்சிகளை விட சுவையாக இருப்பதால் மக்கள் அதனை விரும்பி சாப்பிடுகிறார்கள். சிக்கனை மூலப்பொருளாக வைத்து சமைக்கக் கூடிய வகைகள் எண்ணற்றவை உள்ளன.
ஒவ்வொரு நாளும் சிக்கனை புது புது விதமாக சமைக்கும் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. சிக்கனை குழம்பு, வறுவல், சுக்கா மற்றும் கபாப் என பல வழிகளில் சமைக்கலாம்.
அப்படி பிரியாணி மற்றும் பிற சாப்பாடு வகைகளுக்கு சைடிஷாக வைத்து சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி தான் கறிவேப்பிலை சிக்கன்.
அந்த வகையில் கறிவேப்பிலை சிக்கன் எவ்வாறு செய்து அசத்தலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
- சிக்கன் - அரை கிலோ
- நறுக்கிய வெங்காயம் - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
- இலவங்கப்பட்டை - 1
- அன்னாசி பூ - 1
- ஏலக்காய் - 1
- சோம்பு - 1ஸ்பூன்
- வரமிளகாய் - 2
- மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிக்கன் செய்வது எப்படி?
முதலில் தேவையான அளவு சிக்கனை எடுத்து அதனை மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக கழுவி ஒரு பக்கமாக வைத்து விடவும்.
அதன் பின்னர் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும், கறிவேப்பிலை, இலவங்கப்பட்டை, அன்னாசி பூ, ஏலக்காய், சோம்பு, வர மிளகாய், கருப்பு மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வறுத்தெடுக்கவும்.
மசாலா வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்த மசாலா கலவை நன்கு ஆறியதும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையான பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து, ஒரு பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து, சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதங்க விடவும், அதனுடன் சிக்கன், மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து விடவும். சிக்கன் பாதி வெந்தவுடன் அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவை, கொத்தமல்லி தூள், உப்பு ஆகியவற்றை கலந்து நன்றாக கிளறி வேக விடவும்.
சிக்கன் அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும். சிக்கன் முழுமையாக வெந்ததும் இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை போட்டு அடுப்பை அணைக்கவும்.
ஞாயிற்றுகிழமைகளில் பிரியாணி செய்து விட்டு அதற்கு தொட்டுக் கொள்ள ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் கறிவேப்பிலை சிக்கன் செய்து கொடுக்கலாம். இது வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |