மக்கள் மனதில் என்றென்றும் வாழும் கர்ம வீரர் காமராஜர்!
படிக்காத மேதை, கர்ம வீரர், பெரும் தலைவர், தென்னாட்டு காந்தி, பல சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுபவர்தான் தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர்.
இவர் பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச மதிய உணவு அளிக்கும் திட்டத்தினை ஏற்படுத்தியதோடு, ஏழை மக்களின் கல்வியிலும் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.
பிறப்பு
இவர் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி விருதுநகர், தமிழ்நாடு இந்தியாவில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் காமாக்ஷி.
ஆரம்பகால வாழ்க்கை
1908 ஆம் ஆண்டில் ஏனாதி நாராயண வித்யாசாலையில் சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் உயர்நிலைப் பள்ளியான சத்ரிய வித்யா சாலா பள்ளியில் சேர்ந்தார்.
இவரது ஆறாவது வயதில் இவரது தந்தை இறந்துபோகவே, தாயின் நகைகளை விற்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு துணிக்கடைக்கு வேலைக்கு சேர்ந்தார்.
image - The hindu
விடுதலைப் போராட்டம்
பல தேசத் தலைவர்களின் பேச்சில் கவரப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1920ஆம் ஆண்டில் இந்திய நேஷனல் காங்கிரஸ்ஸின் முழு நேர ஊழியராக சேர்ந்தார்.
மேலும் வைக்கம் சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம், நாக்பூர் கொடி சத்தியாக்கிரகம் என்பவற்றில் பங்கேற்றவர், வாள் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கி நீல் சிலை சத்தியாக்கிரகத்துக்கு தலைமை தாங்கினார்.
ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்ட இவர் ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.
தமிழக முதல்வரானார்
1953ஆம் ஆண்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
image - The new indian express
முதல்வராக ஆற்றிய பணிகள்
ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தினை ஆரம்பித்தார். ஆங்கிலேயர் ஆட்சியின்போது 7 சதவீதமாக இருந்த கற்போரின் எண்ணிக்கை, இவரது ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
தொழில்துறையில் ஆற்றிய பணிகள்
மின் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்றவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, நிலக்கரித் திட்டம், கல்பாக்கம் அணு மின்நிலையம், மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, பாரத மிகு மின் நிறுவனம் போன்ற தொழிற்சாலைகளை அமைத்தார்.
இவரது ஆட்சியில் வடநாட்டு மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, தமிழகம் தொழில் வளத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
image - The new indian express
இறப்பு
1975ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி தனது 72ஆவது வயதில் காலமானார். இவர் உயிர்நீத்த அடுத்த ஆண்டே, இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. சமூகத்துக்கு சேவை செய்வதையே ஒரே நோக்காக கொண்ட அவர் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளவே இல்லை.
உன்னத தலைவரான காமராஜர் நமக்காக விட்டுச்சென்ற சில அற்புத வரிகள்..
- சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும் விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை.
- பணம் இருந்தால்தான் நாலு பேர் மதிப்பார்கள் என்றால்...அந்த மானங்கெட்ட மரியாதை எனக்கு தேவையில்லை.
- கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது.
- அப்பாவி ஏழை மக்களை வசதி கொண்டவர்களும் கல்மனம் கொண்டவர்களும் கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது மிக அவசியம்.
- ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டுவது, ஒரு குடும்பத்திற்கே கல்வி தருவதாகும்.
- பிறர் உழைப்பை தன் சுயநலத்துக்குப் பயன்படுத்துவதே உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.
- நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதுமே கதாநாயகன் தான்.
- உன் பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து வைத்து பிள்ளையை ஊனம் ஆக்காதே.
- எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்.
- நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போகாமல் நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது.
image - swarajya