Veg Biriyani: கல்யாண வீட்டு பாணியில் மதிய உணவு வேண்டுமா?
பொதுவாகவே தினசரி மதிய உணவுக்கு சாதம், சாம்பார், கூட்டு, பொறியல், வடை, பாயசம் என பெரிய பட்டியலில் சமைத்து உங்களுக்கு போர் அடித்துவிட்டதா?
வெறும் 20 நிமிடத்தில் கல்யாண சமையல் சுவையில் அசத்தல் காய்கறி பிரியாணியை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1/2 கிலோ (15 நிமிடம் நீரில் ஊற வைத்தது)
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - சிறிது
பீன்ஸ் - 5-6 (நறுக்கியது)
கேரட் -1 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
கெட்டி தயிர் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
புதினா - 1/2 கைப்பிடி அளவு
மீல் மேக்கர் - 1 கப் (சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பிழிந்து எடுத்துக் கொள்ளவும்)
பிரியாணி மசாலா அல்லது கரம் மசாலா - 1 தே.கரண்டி
சுடுநீர் - 5 கப்
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை கழுவி சுத்தம் செய்து 15 நிமிடங்கள் வரையில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய வெங்காயத்தையயயும் சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தக்காளி மென்மையாக மாறும் வரையில் நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பின்பு நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரையில் கிளறிவிட்டு வதக்க வேண்டும்.
அவை நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறிவிட்டு தயிரையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கொத்தமல்லி, புதினா மற்றும் மீல் மேக்கரை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக கிளறிவிட வேண்டும்.
இறுதியில் பிரியாணி மசாலா அல்லது கரம் மசாலாவை போட்டு நன்றாக கலந்துவிட்டு 5 கப் அளவுக்கு வெந்நீர் ஊற்றி நன்றாக வேகவிட்டு,ஊற வைத்துள்ள பாசுமதி அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட வேண்டும்.
பின்னர் குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கினால் கல்யாண வீட்டு பாணியில் அட்டகாசமான சுவையில் காய்கறி பிரியாணி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |