10 நிமிடத்தில் செய்யலாம் கதம்ப சட்னி: இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்
பொதுவாக வீடுகளில் காலை மற்றும் இரவு வேளைகளில் அதிகமாக இட்லி, தோசை இது போன்ற உணவுகள் தான் சாப்பிடுவார்கள்.
இவ்வாறு உணவுகள் ஏன் சமைக்கிறார்கள் என்றால் சத்தாகவும் இருக்கும். அத்துடன் சமிபாட்டிற்கு இலகுவாகவும் இருக்கும்.
இதற்கு காம்பினேஷனாக சட்னி மற்றும் சாம்பார் வகைகளை எடுத்து கொள்வார்கள.
தினமும் ஓரே சட்னி, சாம்பார் என்றால் நம்மாலும் விரும்பி சாப்பிட முடியாது. அந்த வகையில் நாவிற்கு சுவையான கதம்ப சட்னி செய்து சாப்பிடலாம்.
இதில் நிறைய பொருட்கள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்பட உதவியாக இருக்கின்றது.
இதன்படி, சுவையான கதம்ப சட்னி எவ்வாறு செய்வது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பூண்டு - 4 பற்கள்
- காய்ந்த மிளகாய் -5
- இஞ்சி - சிறிய துண்டு
- கறிவேப்பிலை - 2
- புதினா - சிறிதளவு
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- புளி - 1/2 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- உப்பு - தேவைக்கேற்ப
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கதம்ப சட்னி செய்முறை
முதலில் சட்னிக்கு தேவையான வெங்காயம் , தக்காளி என்பவற்றை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
பின்னர் வாணலியை எடுத்து அதில் எண்ணெயை ஊற்றி சிகப்பு மிளகாய், வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, புளி ஆகிய பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.
அதில் துருவிய தேங்காயை சேர்த்து சுமாராக ஒரு 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வதக்கவும்.
வதக்கிய பொருட்களை ஆற விட்டு மிக்ஸி சாரில் போட்டு சட்னியாக அரைத்து எடுக்கவும். அளவு குறைவாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
பின்னர் கடுகு, உளுத்தம் பருப்பு ஆகிய பொருட்களை போட்டு தாளித்து இறக்கினால் சுவையோ சுவை..!