வைட்டமின் D நிறைவாக கிடைக்க சிறந்த வழி ! விளக்கமளிக்கும் மருத்துவர் அருண்குமார்
பொதுவாகவே உடல் இயற்கையாகவே உற்பத்தி செய்து கொள்ளும் ஊட்டச்சத்துக்களுள் ஒன்று தான் வைட்டமின் டி. சூரிய ஒளி நம் மீது பட்டாலே போதும் உடல் தானாகவே வைட்டமின் டி யை உற்பத்தி செய்துக்கொள்ளும்.
பொதுவாக நமது உடலுக்கு வைட்டமின் டி சத்து இயற்கையாக கிடைக்க சூரிய ஒளியில் நிற்பது தான் ஒரே வழி என ஊட்டச்சத்து நிபுணர் அருண்குமார் குறிப்பிடுகின்றார்.
அதிலும் காலை மற்றும் மாலை நேர இதமான சூரிய ஒளியில் வைட்டமின் டி சத்து கிடைப்பதை பார்க்கவும் மதியம் 11 மணிமுதல் 2 மணிவரையில் உடலில் சூரிய ஒளி படும் போது, அதிகளவில் வைட்டமின் டி சுரக்கிறது என வலிவுறுத்துகின்றார்.
மேலும் வைட்டமின் டி சத்து கிடைக்க என்ன எல்லாம் செய்ய வேண்டும் என மருத்துவர் என்ன கூறுகிறார் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
வைட்டமின் D கிடைக்க சிறந்த வழி
சூரிய ஒளியில் படும் போது சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தியாகிறது. இது கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது.
இது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சி மற்றும் வலுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, வைட்டமின் டி தசை செயல்பாடு, நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் செல்கள் ஆகியவற்றிற்கும் அவசியம்.
ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைக்கு 400 யூனிட் வைட்டமின் டியும் 1 வயதில் இருந்து 70 வயது வரையில் 600 யூனிட் வைட்டமின் டி யும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 800 யூனிட் வைட்டமின் டி நாளொன்றுக்கு தேவைப்படுகின்றது.
ஒவ்வொரு 100 கிராம் மத்தி மீனிலும் 4.8 எம்.சி.ஜி வைட்டமின் டி உள்ளது. மேலும் இவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை கொண்டுள்ளன.
எனவே மத்தி மீனை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான அடிப்படை சத்துக்களை பெற முடியும். தினசரி 200 கிராம் மத்தி மீனை உணவில் சேர்த்துக்கொள்வதால், 500 யூனிட் வைட்டமின் டி உடலுக்கு கிடைக்கின்றது.
நாளொன்றுக்கு 200 கிராம் மீனை தினசரி சாப்பிடுவது சற்று கடினமானதாகும். அதனை எல்லோராலும் செய்ய முடியாது.
முட்டையில் வைட்டமின் டி ஆனது 1 எம்.சி.ஜி அளவில்தான் உள்ளது, இருப்பினும் கோழிகள் பெறும் சூரிய ஒளி மற்றும் அவை உண்ணும் தீவனத்தை பொறுத்து முட்டையின் வைட்டமின் டி அளவும் மாறுபடும்.
அதிகபட்சம் வைட்டமின் டி சத்துக்கள் முட்டையின் மஞ்சள் கருவில் இருப்பதால் அவற்றை முழுவதுமாக சாப்பிட வேண்டும். ஒரு மஞ்சள் கரு சாப்பிடுவதால், 40- 50 யூனிட் வைட்டமின் டி கிடைக்கின்றது.
நாளொன்றுக்கு தேவையான வைட்டமின் டி யை முட்டையில் இருந்து மட்டுமே பெற நினைத்தால் 10 முட்டைகள் வரையில் சாப்பிட வேண்டும். இது சாத்தியமற்றது.
பலருக்கு தினசரி உணவில் இருந்து போதுமான வைட்டமின் டி கிடைப்பதில்லை. குறிப்பாக, சூரியன் வராத பகுதிகள் அதிக பிரச்னைகளை சந்திக்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
சிலர் வைட்டமின் டியை பெற மீன் எண்ணெய் மாத்திரைகளையும் பயன்படுத்துவார்கள். ஆனால் இதில் மிக குறுகிய அளவிலேயே வைட்டமின் டி கிடைப்பதாக அருண்குமார் குறிப்பிடுகின்றார்.
அது மட்டுமன்றி வெளிநாடுகளில் அன்றாடம் உண்ணும் பால், பான், ஓட்ஸ், போன்ற உணவுகளில் வைட்டமின் டி யை செயற்கையாக கலந்துவிடுவார்கள்.
இதனால் சிறிதளவு வைட்டமின் டி உடலுக்கு கிடைக்கின்றது. இருப்பினும் இவர்கள் செயற்கையாக சேர்க்கும் வைட்டமின் டி2 வானது டி3 அளவுக்கு உடலுக்கு பலன்களை கொடுப்பது கிடையாது.
எனவே பல்வேறு வழிகளிலும் உடலின் செயற்பாடுகளில் பங்குவகிக்கும் வைட்டமின் டி யை உணவின் மூலம் ஈடு செய்வது சற்று கடினமான விடயம் தான்.
வைட்டமின் டி யின் தேவையை எளிமையாகவும் முழுமையாகவும் நிறைவு செய்ய தினசரி 11 மணிமுதல் 2 மணிவரையில் குறைந்தது 15 நிமிடங்கள் வெயிலில் இருந்தாலே போதும் என குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |