சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி போடும் நிலை ஏன் வருகிறது?
சர்க்கரை நோயாளிகள் போட்டுக் கொள்ளும் இன்சுலின் ஊசி குறித்த பொதுநல மருத்துவர் Dr.ஃபரூக் அப்துல்லா அவர்களின் பேஸ்புக் பதிவிலிருந்து,
ஒரு நீரிழிவு நோயாளிக்கு நீரிழிவு ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் அறிந்தால் இன்சுலின் ஊசி ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை விளங்க முடியும்.
நீரிழிவு என்பது நோய் என்ற நிலையில் இருந்து அது ஒரு பன்முக காரணிகள் கொண்ட குறைபாடு என்ற நிலையில் வைத்துப்பார்க்கப்படுகிறது.
it's a deficiency .
அதாவது நம் உடல் ஊட்டச்சத்துகளை கிரகித்துக்கொள்ளும் தன்மையில் ஏற்படும் குளறுபடி அல்லது குறைபாட்டை நாம் பொதுப்பெயராக "நீரிழிவு" என்று அழைக்கிறோம்
Diabetes is a complex disorder with which our body becomes deficient in handling nutrients from food in a right way.
ஒரு நார்மல் மனிதன் அவன் உண்ணும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட் இருந்தால் அது ரத்தத்தில் க்ளூகோசை கலக்கும்.
ரத்தத்தில் இருக்கும் க்ளூகோசை கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் உணரும்.
உணர்ந்த அடுத்த சில நாழிகைகளில் "இன்சுலினை" ரத்தத்தில் கலக்கும்.
இன்சுலினின் வேலை க்ளூகோசை உடலில் இருக்கும் செல்கள் அனைத்திற்கும் சென்று பசித்திருக்கும் சேய்களுக்கு அன்னை உணவு புகட்டுவது போல பசித்திருக்கும் செல்களுக்கு உணவு ஊட்டும்.
மிஞ்சிய உணவை ( க்ளூகோசை) கல்லீரலில் க்ளைகோஜெனாகவும் தோலுக்கு அடியே ட்ரைகிளிசரைட் எனும் கொழுப்பாகவும் சேமிக்க உதவும்.
இது பஞ்ச காலத்தில் ஏற்படும் பட்டினிகளின் போது உதவும் என்பதற்காக நமது உடலின் ஏற்பாடு.
நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்பு( Fat ) மற்றும் புரதம் (protein) போன்றவை ரத்தத்தில் கலக்கும் போது முறையே ஃபேட்டி அமிலங்களாகவும் அமினோ அமிலங்களாகவும் மாறும்.
அப்போதும் இன்சுலின் சுரக்கும். ஃபேட்டி அமிலங்களையும் அமினோ அமிலங்களையும் நமது உடலின் கட்டுமானப்பணிகளுக்கு உபயோகிக்கும் முக்கிய வேலை இன்சுலினுடையது. அதனால் அதை "கட்டுமான மீளுருவாக்க ஹார்மோன்" என்று அழைக்கிறோம். Anabolic harmone.
மேலும் நமது உடலில் புரதத்தை சேமித்து வைத்திருக்கும் தசைகளும், கொழுப்பும் கரையாமல் இருக்க இன்சுலின் அவசியமாகிறது.
இன்சுலின் கொழுப்பு கரைவதை தடுக்கிறது.
இதில் இருந்து நமக்கு புரிந்திருக்கும் "இன்சுலின்" என்பது நமக்கு மிகவும் தேவையான அத்தியாவசியமான ஹார்மோன் என்று.
இந்த ஹார்மோன் பிறப்பில் இருந்தே சிலருக்கு முற்றிலுமாக அல்லது போதுமான அளவு சுரக்காது . இவர்கள் டைப் ஒன்று நீரிழிவு (TYPE I) உள்ளவர்கள் என்று அறியப்படுகிறார்கள்.
இவர்களுக்கு இன்சுலின் சுரப்பு சுத்தமாக இல்லாததால் நாம் கட்டாயம் வெளியில் இருந்து இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் யார் கூறினாலும் இன்சுலின் ஊசியை டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள் நிறுத்திவிடக்கூடாது.
அவ்வாறு நிறுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அபாயகரமான நிலைக்கு ஏறிவிடும்.
மேலும் இன்சுலின் இல்லாததால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து ரத்தத்தில் கீடோன்கள் ஏறிவிடும்.
நமது செல்களுக்கு க்ளூகோசை ஊட்டவும் இன்சுலின் இல்லை. புதிதாக உருவாகும் கீடோன்களை சாப்பிட்டும் பழக்கமில்லை. ஆதலால் ஒரே சமயத்தில் க்ளூகோசும் கீடோன்களும் அபாய அளவை தாண்டி கோமா நிலைக்கு அழைத்துச்செல்லும். இதை Diabetic Ketoacidotic coma என்கிறோம்..
பல நேரங்களில் மரணம் சம்பவிக்கும் .எனவே டைப் ஒன்று நீரிழிவு நோயாளிக்கு கட்டாயம் இன்சுலினை மறுக்கக் கூடாது.
இப்போது பெரும்பான்மையான டைப் 2 நீரிழிவு நோயாளிகள் கதைக்கு வருவோம்.
டைப் டூ நீரிழிவு எப்படி வருகிறது ?
பொதுவாக முப்பது வயது முதல் ஐம்பது வயதிற்குட்பட்ட காலத்தில் தான் அதிகபட்சமான டைப் டூ நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகின்றன.
எனவே என்னைப் பொறுத்த வரை நான் டைப் டூ நீரிழிவை "இயந்திர தேய்மான நோயாகவே பார்க்கிறேன்"
நமது உடல் ஒரு இயந்திரம் என்றால் அது இயங்க தேவையான எரிபொருளை விடுத்து வேறொரு எரிபொருளில் இயக்குவதால் ஏற்படும் தேய்மானம் தான் நீரிழிவு நோய் என்பது எனது கருத்து.
மருத்துவ விஞ்ஞானம் டைப் டூ டயாபடிஸ்க்கு முதல் காரணமாக "ஜீன்கள்" எனும் பிறவிக்குறைபாட்டை குறிக்கிறது.
அடுத்த காரணங்களாக
அதிக கலோரி உணவு
அதிக உடல் எடை
குறைந்த உடல் பயிற்சி
அதீத மன அழுத்தம்/உளைச்சல்
போன்றவற்றை கூறுகிறது.
நிச்சயம் ஜீன்களின் தாக்கத்தை மறுப்பதற்கில்லை. நம்மால் பெரிதாக மாற்ற இயலாத ஒரு காரணியாக ஜீன்கள் இருக்கின்றன. இதை Non modifiable risk factor
ஆனால் நம்மால் மாற்ற முடிந்த Modifiable risk factorகளில் முதன்மையாக நான் கருதுவது.
"உணவு"
டைப் டூ நீரிழிவு நோயாளிக்கு ஏன் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாகின்றன?
1. அவரது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சரிவர ரத்த க்ளூகோஸ் அளவுகளை கிரகிக்க முடியாமல் போவது.
இதனால் உணவு சாப்பிட்டபின் ஏறும் சர்க்கரைக்கு ஏற்றாற் போல் இன்சுலின் சுரப்பு இருக்காது.
2. நமது உடலில் உள்ள அத்தனை செல்களிலும் இன்சுலினை இணங்கண்டு கொள்ள ஏதுவாக Insulin receptor கள் இருக்கும். இவற்றின் அளவுகள் செயல்களில் குறைவதால் கணையத்தால் சுரக்கப்பட்ட இன்சுலின் செல்களில் சரியாக வேலை செய்யாது இதை Insulin resistance என்போம்.
எனவே ஒரு சமயத்தில் இன்சுலினும் குறைவாக சுரந்து , சுரக்கப்பட்ட கொஞ்சூண்டு இன்சுலினும் சரியாக வேலை செய்யாமல் போவதால் ஏற்படுவதே டைப் டூ டயாபடிஸ்
இன்சுலின் ஏன் மாத்திரையாக இல்லாமல் ஊசியாக இருக்கிறது?
இன்சுலின் என்பது புரதமாக இருப்பதால் மாத்திரையாக போட்டால் நமது ஜீரண மண்டலம் அதை செரிமானம் செய்து விடும். பலன் இருக்காது. ஆகவே தான் தோலுக்கு அடியில் போடும் ஊசியாக இன்சுலின் கிடைக்கிறது.
ஆகவே, இன்சுலின் ஒருவருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது என்றால் இனிமேல் அவருக்கு உடலில் சுரக்க இன்சுலின் இல்லை என்று அர்த்தம்.
இதுவன்றியும் சில அசாதாரண சூழ்நிலைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படும்.அவை
1. கடும் நோய் தொற்று
2. விபத்தில் மோசமான காயம்
3. அறுவை சிகிச்சை
4. ஸ்டிராய்டு மருந்து உபயோகிக்கும் போது
5. கர்ப்பிணிகள்
மேற்சொன்ன இடங்களில் நீரிழிவு மாத்திரைகளுடனோ அல்லது தனியாகவோ இன்சுலின் ஊசி உபயோகிக்கப்படும். மேற்சொன்ன இடங்கள் அனைத்திலும் நம் உடலால் முறையாக இன்சுலின் சுரந்து சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க இயலாது அல்லது உடல் கட்டுமானப் பணிகளை சரி வர செய்ய இயலாது. எனவே இன்சுலின் கட்டாயம் தேவைப்படுகிறது .
ஒருமுறை போட ஆரம்பித்த இன்சுலின் ஊசியை டைப் டூ டயாபடிஸ் நோயாளி வாழ்நாள் முழுவதும் நிறுத்த முடியாதா???
இன்சுலின் உங்களுக்கு எதனால் பரிந்துரை செய்யப்பட்டது என்பதை அறிந்துமா இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை.
நீங்கள் உங்கள் உணவில் மாவுச்சத்தின் அளவை தினமும் 40 கிராமிற்கு உள்ளாக குறைத்தால் உங்கள் கணையம் சுரக்கும் குறைந்த இன்சுலினே போதுமானதாக இருக்கும் நிலை ஏற்படலாம்.
சில நேரங்களில் முற்றிலும் பீட்டா செல்கள் இறந்து விட்டிருந்தால், ஏற்கனவே போடப்பட்டு வந்த இன்சுலின் அளவுகளை விடவும் குறைந்த அளவே போதும் என்ற நிலை வரலாம்.
எனது அனுபவத்தில் பல டைப் டூ நீரிழிவு நோயாளிகள், குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு மாறி இன்சுலினை நிறுத்தி மாத்திரைகளுக்கு மாறிய கதைகளை கண்டுள்ளேன்.
பலருக்கு பேலியோ உணவு முறைக்கு மாறியும் கூட இன்சுலின் தொடர்ந்து தேவைப்படுகிறது அதையும் காண்கிறோம்.
தேவைக்கு ஏற்ப இன்சுலின் வழங்கப்படும். குறைக்கப்படும். நிறுத்தப்படும், அந்த முடிவை மருத்துவரிடம் விட்டு விடுங்கள் .
இன்சுலின் ஊசி நல்லதா ? கெட்டதா ? என்ற கேள்விக்கான பதில்
நிச்சயம் அது நன்மை செய்வது தான்.
அதிக மாவுச்சத்து அதனால் டைப் டூ நீரிழிவை பெற்று இன்சுலின் சுரக்காத நிலைக்கு சென்ற மக்களுக்கும் , பிறவி குறைபாடாக டைப் ஒன்று நீரிழிவை பெற்ற மக்களுக்கும் நிச்சயம் இன்சுலின் நிச்சயம் அமிர்தம் தான்.
இன்சுலினால் தினமும் பல கோடி உயிர்கள் காக்கப்படுகின்றன.