உக்ரைன் போரில் உயிரிழந்த இந்திய மாணவர்! தந்தையிடம் கடைசியாக பேசிய காணொளி வெளியானது
உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளால் தாக்கப்பட்டதில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட நிலையில், அவர் தனது தந்தையிடம் காலையில் கடைசியாக பேசிய காணொளி வெளியாகியதுடன், நவீன் உயிரிழந்த விபரமும் வெளியாகியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்த நிலையில், அண்மையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஆறு நாட்களாக, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட இடங்களில், ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் இன்று, உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில், ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதலை தீவிரப்படுத்தின. இந்த தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன் சேகரப்பா, கர்நாடக மாநிலம் ஹாவேரியில் உள்ள சாலகேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர்.
கார்கிவ் நகரில், அருகில் உள்ள கடைக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்க நவீன் சென்றுள்ளார். அப்போது அங்கு நடைபெற்ற தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவீன் உயிரிழப்பதற்கு முன்பு கடைசியாக தனது தந்தையிடம் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.