கேப்டனாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கின் முதல் வெற்றி - பயிற்சி ஆட்டத்தில் அபாரம்!
இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5வது டெஸ்ட் போட்டியை விளையாடி வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் கவுண்டி அணியான டெர்பிஷிருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்திய அணி விளையாடி வருகிறது.
7ம் தேதி தொடங்க இருக்கும் இந்த டி20 போட்டியிக்கு தயாராகும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. அணியில் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர், ஆர்ஷ்தீப் சிங், ரவி பிஸ்னாய், சஞ்சு சாம்சன் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற, ஹர்திக், இஷான் கிஷன் ஆகியோர் ஓய்வில் இருந்தனர்.
முதல் டாஸ் வென்ற கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். பின் களமிறங்கிய டெர்பிஷிர் அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர் மசூத், லுயிஸ் ரீஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
வெயின் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். நடுவரிசையில் இருந்த வீரர்கள், தங்களது இ,ன்னிங்சை நன்றாக தொடங்கினாலும், அதனை பெரிய இலக்காக மாற்றாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.

இறுதியில் இருபது ஓவர்கள் முடிவில் டெர்பிஷிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 31 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர் ருத்துராஜ் 3 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் சொதப்பினார். இதனையடுத்து மீண்டும் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

சஞ்சு சாம்சன் 30 பந்துகளில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 37 பந்துகளில் 59 ரன்களை விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.
மேலும், நட்சத்திர வீரர் சூர்யகுமார் தன் பங்கிற்கு 22 பந்துகளில் 36 ரன்கள் விளாச, கேப்டன் தினேஷ் கார்த்திக் 7 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 16.4 வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. 2வது பயிற்சி ஆட்டம் நாளை இரவு நடைபெறுகிறது.