சத்துக்கள் நிறைந்த ராகி முருங்கைக்கீரை அடை..எப்படி செய்யனும் தெரியுமா?
காலையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சத்தான காலை டிபனை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா? அப்படியானால் அந்த ராகி மாவைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ராகி அடையை செய்து கொடுங்கள். அதுவும் வெறும் அடை செய்து கொடுக்காமல் முருங்கைக்கீரை அடை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக வேர்க்கடவை தேங்காய் சட்னியை செய்யுங்கள். இந்த காம்போ அட்டகாசமாக இருக்கும்.
உங்களுக்கு இந்த ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி முருங்கைக்கீரை அடை மற்றும் வேர்க்கடலை தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 250 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 இன்ச்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - 1 கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்க்க வேண்டும்.
அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, 1 கையளவு கொத்தமல்லி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
அடுத்து அதில் 1 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கைகளால் நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரைத் தெளித்து அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்

பின்னர் ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது எடுத்து உருட்டி, இலையின் நடுவே வைத்து, வட்டமாக தட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தட்டி வைத்துள்ள அடையை போட்டு, முன்னும், பின்னும் எண்ணெய் தடவி வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி முருங்கைக்கீரை அடை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |