Mushroom Egg Omelette: வீட்டுல முட்டையும், காளானும் இருக்குதா? இந்த மாதிரி ஆம்லெட் செய்து சாப்பிடுங்க
Mushroom Egg Omelette: சத்தான காலை உணவிற்கு காளானுடன் முட்டை ஆம்லெட் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் கட்டாயம் புரதச்சத்து இருக்க வேண்டும். இட்லி, தோசை போன்ற உணவுகளில் அதிகமான புரதச்சத்து கிடையாது.
ஆதலால் காலை உணவிற்கு முட்டை சாப்பிடும் போது அதனை காளானுடன் சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம். இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் வயிறு நிறைந்ததாகவும், சுவையாகவும் இருக்கும் காளான் முட்டை ஆம்லெட் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
முட்டை - 6
மிளகுத் தூள் - ½ டீ ஸ்பூன்
பட்டன் காளான் - 200 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் துகள்கள் - 1 டீ ஸ்பூன்
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மொஸரெல்லா சீஸ் - ½ கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் பூண்டு மற்றும் வெங்காயத்தினை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காளானை மண் இல்லாமல் சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
சீஸை ஒரு ½ கப் அளவிற்கு துருவி தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். காய்ந்த மிளகாய் துகள்களையும் எடுத்துக் கொள்ளவும்.
கிண்ணம் ஒன்றில் முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். இதனுடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைத்துவிட வேண்டும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து நெய், வெண்ணெய் எதுவும் சேர்க்காமல் காளானை சேர்த்து வதக்கவும். காளானில் இருந்து தண்ணீர் வெளியேறி வேக தொடங்கும். குறித்த தண்ணீர் முழுவதும் வற்றிய பின்பு அதனுடன் வெண்ணெய் சேர்க்கவும்.

பின்பு நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம், மிளகாய் தூகள்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்களுக்கு வதக்கி அடுப்பினை அணைத்துவிடவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து கல் சூடானதும் முட்டை கலவையை சேர்த்து நன்றாக பரப்பிவிடவும். அதன் மேலே காளானையும் மேலே தூவிவிடவும்.
முட்டை சிறிது வெந்த பின்பு துருவி வைத்துள்ள சீஸையும் மேலே தூவி விடவும். முட்டையின் ஒரு பாதியை கரண்டியினால் மடித்து மற்றொரு பகுதியில் படும்படியாக மூடி வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான மஷ்ரூம் ஆம்லெட் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |