Madhampatty Rangaraj recipe : பிரியாணியை மறக்கடிக்கும் பாரம்பரிய அரிசி பருப்பு சாதம்!
Madhampatty Rangaraj recipe : அரிசி பருப்பு சாதம் தென்னிந்தியாவின் பாரம்பரியமான, சுவையும் சத்தும் நிறைந்த உணவுகளில் ஒன்று. அரிசி, பருப்பு, சீரகம், கடுகு, கறிவேப்பிலை போன்ற எளிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவு, சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் சிறந்தது.
இதனுடன் அப்பளம், ஊறுகாய் அல்லது தயிர் சேர்த்துச் சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும். கோயம்புத்தூர் மக்களுக்கு பிரியாணி எவ்வளவு பிடிக்குமோ, அதே அளவுக்கு அரிசி பருப்பு சாதமும் பிடித்தமானது.

இத்தனை சிறப்புகள் கொண்ட அரிசி பருப்பு சாதத்தை சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் பாணியில் வீட்டிலேயே மிக எளிமையாகவும் சுவையாகவும் எப்படிச் செய்யலாம் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி ½ கிலோ - (500 கிராம்)
துவரம் பருப்பு - 150 கிராம்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் -3
கறிவேப்பிலை - 2 கொத்து
பச்சை மிளகாய் - 3–4
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 2 நடுத்தர அளவு
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
சாம்பார் தூள் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - ½ கப்
பூண்டு - 8–10 பல்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை -சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு

தயாரிக்கும் முறை
முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்துப் பொரிய விடவும்.
அதனுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். தொடர்ந்து சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அடுத்து இரண்டு துண்டுகளாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். பின்னர் இரண்டு தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்துக் கலக்கவும்.

மசாலாவும் தக்காளியும் நன்றாக வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும். காரம் சற்று அதிகமாகப் பிடிக்கும் என்றால் பச்சை மிளகாயைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
இப்போது ஊறவைத்த அரிசி மற்றும் துவரம் பருப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீர் கொதித்ததும் குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்.

பின்னர் மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, குக்கரின் அழுத்தம் முழுமையாகக் குறைந்ததும் மூடியைத் திறக்கவும்.
இறுதியாகப் பொடித்த மிளகு, சீரகம், நசுக்கிய பூண்டு மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கவும். சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அனைத்தும் ஒன்றாகக் கலக்கும்படி நன்றாகக் கிளறிவிட்டு மேலே கொத்தமல்லித்தழை தூவிக் கலந்துவிட்டால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் அரிசி பருப்பு சாதம் தயார்.