17 வயதில் தொடங்கிய முயற்சி! 8 அடி 3 அங்குல நீள தாடி வளர்த்து சாதனை படைத்த மனிதர்
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இருக்கின்றது. ஆனால், அவர்கள் சாதிக்கும் விதம்தான் வித்தியாசமாக உள்ளது.
உடற்பயிற்சியில் சாதனை, ஓவியம் வரைவதில் சாதனை, நடமாடுவதில் சாதனை இப்படி ஒவ்வொரு விடயத்திலும் தினம் தினம் பல பேர் சாதித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, தாடி வளர்த்ததன் மூலம் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் என்பதை நம்ப முடிகின்றதா?
பிர்ஜெர் பெலாஸ் என்னும் ஸ்வீடனைச் சேர்ந்த ஒருவர் தனது தாடியை 5 அடி 9 அங்குலத்துக்கு வளர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்தார்.
அந்த சாதனையை கடந்த 2008 ஆம் ஆண்டு, கனடாவில் வசிக்கும் சீக்கியரான சர்வன் சிங் என்பவர் தனது தாடியை 7அடி 8 அங்குலமாக வளர்த்து காட்டியதன் மூலம் முறியடித்தார்.
அதன்பின்னர் 2010ஆம் ஆண்டு இவரது தாடியை அளந்தபோது 8 அடி 2.5 அங்குலமாக வளர்ச்சியடைந்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சர்வன் சிங்கின் தாடியை அளந்து பார்த்தபோது, அது 8 அடி 3 அங்குலமாக வளர்ந்திருந்தது.
இவர் முன்பு தான் செய்து வைத்திருந்த சாதனையை தானே மீண்டும் முறியடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
இந்நிலையில், “நான் 17 வயது தொடக்கம் தாடி வளர்த்து வருகின்றேன். ஒருபோதும் வெட்டியதில்லை. நானொரு சீக்கியராக இருப்பதால் தாடி முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இதை கடவுளின் பரிசாக நான் கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.