குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த முட்டை ஆப்பம்
பொதுவாகவே குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் உணவு உண்பது மிகவும் பிடிக்கும். வித்தியாசமான வண்ணங்கள், உருவங்கள் என்பவை அவர்களை பெரிதும் ஈர்க்கும்.
அந்த வகையில் முட்டை உடலுக்கு மிகவும் சத்துமிக்க ஒரு உணவுப் பொருளாகும். ஆனால், பல குழந்தைகள் அவற்றை உண்ண விரும்புவதில்லை.
அதனால் சற்று வித்தியாசமான முறையில் ஆப்பம் செய்யும்போது அதை முட்டை ஆப்பமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். இனி முட்டை ஆப்பம் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 3 கப்
உளுந்து - 3 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 கப்
சமையல் சோடா - 3 சிட்டிகை
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
முட்டை மசாலா செய்ய
முட்டை - 3
நெய் - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் மிளகுத்தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைத்து, நன்றாக கழுவிவிட்டு, அதில் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மா பதத்துக்கு கரைத்து புளிக்க விடவேண்டும். அதன் பின்னர் ஆப்பம் ஊற்றுவதற்கு முன்பு மாவில் சமையல் சோடாவைக் கரைத்து கலந்துவிட வேண்டும்.
பின்னர் ஆப்பக் கடாயில் சிறிது எண்ணெய் தடவி, மாவை சட்டியில் ஊற்றி இரண்டு கையில் பிடித்து சுழற்றவும்.
அதற்குப் பின் அடித்து வைத்திருக்கும் முட்டையை ஒரு குழி கரண்டியில் எடுத்து மாவின் நடுவில் ஊற்றி ஒரு முறை சுழற்றி, நெய் ஊற்றி மூடியி வேகவிடவும்.
அருமையான முட்டை ஆப்பம் தயார்.