இப்படி செய்தால் 6 மாதங்கள் வரை தேங்காய் கெட்டுப் போகாமல் இருக்கும்!!!
சிலரது வீடுகளில் அளவிற்கு அதிகமாக தேங்காய் வாங்கி வைத்திருப்பார்கள். காரணம் தேங்காயின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும்.
அவ்வாறு வாங்கி வைக்கும் தேங்காய் பல தருணங்களில் அழுகி தூக்கிவீச வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.
இந்நிலையில் தேங்காயை நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகாமல் பிரிட்ஜில் பாதுகாப்பது குறித்து பிரிட்ஜ் இல்லாதவர்கள் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தேங்காயில் இரண்டு வகைகள் காணப்படுகின்றது. நிறத்தில் சற்று அடர்ந்த நிறமாக காணப்படும் தேங்காய் பழைய காய் என்றும் லைட்டான நிறத்தில் இருக்கும் காயை புதிய காய் என்று கூறுவார்கள். பழைய காய் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப்போகாது... ஆனால் புதிய காய் சீக்கிரமாக கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆதலால் பழைய காயையே வாங்கி பயன்படுத்தலாம்.
தேங்காய் மட்டையோடோ, அல்லது உரிக்கப்பட்டோ இருந்தால் குடுமி பக்கம் மேலே இருக்குமாறு தரையில் அடுக்கி வைக்க வேண்டும். ஆனால் அடிக்கடி அதனை நகர்த்தாமல் இருப்பது முக்கியம்.
இவ்வாறு குடுமி பாகத்தினை மேலே பார்த்தவாறு வைத்தால், தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் தண்ணீர் படாமல் இருக்கும். ஏனெனில் தேங்காய் கெட்டுப்போக வேண்டும் என்றால் இந்த கண் பகுதியே அதிகமாக ஓட்டை விழும். தண்ணீர் பட்டால் இந்த நாசுக்கான கண் பகுதி சீக்கிரம் அழுக ஆரம்பிக்கும்.
இவ்வாறு மேலே பார்க்க வைத்தால் சுமார் 6 மாதம் வரை தேங்காய் கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம்.
உடைத்த தேங்காய் என்றால் எப்பொழுதும் கண் இருக்கும் பகுதியை முதலில் பயன்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.
வீட்டில் பிரிட்ஜ் இல்லாதவர்கள், உடைத்த தேங்காய் மூடிகளை ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரில் போட்டு வெள்ளை துணியை போட்டு மூடி பாதுக்காக்கவும். ஆனால் ஒரு நாளைக்கு மூன்று முறை கட்டாயம் தண்ணீரை மாற்ற வேண்டும்.
தேங்காய் சில்லாக இருந்தாலும், மூடியாக இருந்தாலும் இவ்வாறு செய்யலாம். மேலும் தேங்காய் மூடியில் சிறிது உப்பை தடவி வைத்தாலும் தேங்காய் கெட்டுப்போகாமல் இருக்கும்.
வீட்டில் பிரிட்ஜ் இருப்பவர்கள் தேங்காயை துருவி பிரீசரில் காற்று புகாத டப்பாவில் வைத்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
தேங்காய் சில்லாக இருந்தால் சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் துண்டுகளை போட்டு பிரீசரில் வைக்காமல் பிரிட்ஜில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.