தாபா பாணியில் அட்டகாசமாக சுவையில் பன்னீரை புர்ஜி கிரேவி... எப்படி செய்வது?
பொதுவாகவே பன்னீர் அனைவருக்கும் பிடித்த ஒரு சைவ உணவாக இருக்கின்றது. அசைவம் இல்லாமல் சாப்பிடவே மாட்டேன் என சொல்பவர்கள் கூட பன்னீரில் செய்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.
குறிப்பாக பன்னீர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் என்பதால், பன்னீர் புர்ஜி செய்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தை 2 சப்பாத்தியை வாங்கி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் தாபா பாணியில் அட்டகாசமாக சுவையில் பன்னீரை புர்ஜி கிரேவியை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடலை மாவு - 2 தே.கரண்டி
தயிர் - 2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1தே.கரண்டி
மல்லித் தூள் - 1/2 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
சீரகத் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகுத் தூள் - 1/4 தே.கரண்டி
கிரேவிக்கு தேவையானவை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.கரண்டி
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
பன்னீர் - 200 கிராம்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை மாவை சேர்த்து லேசாக நிறம் மாறும் வரையில் கிளறி ஒரு கிண்ணத்திற்கு மாற்றி குளிரவிட வேண்டும்.
நன்றாக குளிர்ந்ததும் அதில் புளிக்காத தயிர், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
அதன் பின்னர் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 தே. கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகம் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கலந்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்பு கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொத்தமல்லியைத் தூவி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேகவிட வேண்டும்.
5 நிமிடங்களின் பின்னர் மூடியைத் திறந்து, அதில் பன்னீரை கைகளால் உதிர்த்து விட்டு, 2 நிமிடங்கள் வரையில் மூடி வேக வைத்து இறக்கினால், சுவையான தாபா ஸ்டைல் மணமணக்கும் பன்னீர் புர்ஜி கிரேவி தயார். அதனை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவை அட்டகாசமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |