பிறந்த குழந்தைகளுக்கு இத்தனை பல் பிரச்சனையா? பெற்றோர்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
குழந்தைக்கு முதல் முதலாக ஓரிரு பற்கள் முளைக்கும் முதலிருந்தே சரியான பராமரிப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும். உங்கள் குழந்தைக்கு முளைக்கும் பால் பற்கள் (brushing tips and oral care) தற்காலிகமானதுதான். ஆனால், குழந்தை மென்று சப்பி சாப்பிட அந்தப் பற்களே உதவப் போகின்றன. ஆதலால், தற்காலிகமான பற்களுக்கும் பராமரிப்பு மிக மிக அவசியம். நல்ல பராமரிப்பை மேற்கொண்டால் பால் பற்கள் விழுந்து மீண்டும் முளைக்க கூடிய நிரந்தர பற்களும் நன்றாகவே இருக்கும்.
ஆரோக்கியமான பற்களாக அமையும். பிறந்தது முதலே வாய், ஈறு பராமரிப்பு? ஒவ்வொரு முறை தாய்ப்பால் குடித்து முடித்த பின்னரும் குழந்தையின் வாய், கன்னம், உதடு ஆகியவற்றை ஈரத்துணியால் துடைத்து சுத்தம் செய்யுங்கள். ஒவ்வொரு முறை குளிக்க வைக்கும்போதும், நாக்கில் உள்ள வெள்ளை படிந்த மாவை அகற்ற வேண்டும். மிகவும் லேசாக ஈறுகளைத் துணியால் வைத்து சுத்தம் செய்யலாம். ஈறுகளை மிதமாக அழுத்தி மசாஜ் கொடுக்கலாம். ஈறுகளை சுத்தம் செய்ய மென்மையான துணியை பயன்படுத்துங்கள்.
இப்போது பிரஷ் வேண்டாம். எப்போது முதல் குழந்தைக்கு பல் துலக்கலாம்? முதல் பல் முளைக்கும் போதிலிருந்தே பல் துலக்கும் பழக்கமும் பல், வாய் சுத்தமாக பராமரிப்பதும் அவசியம். 0-1 வயது குழந்தைகளுக்கு பேஸ்ட் வேண்டாம். குழந்தைக்கு வாய் கொப்பளிக்க தெரியாது என்பதால், நீங்கள் குழந்தையின் வாயை பல் துலக்கிய பின் வாயை நன்கு தண்ணீர் விட்டு சுத்தம் செய்யுங்கள்.
குழந்தைக்கு வாய் கொப்பளிப்பதையும் சொல்லிக் கொடுக்கலாம். ஓரிரு பற்கள் முளைத்த குழந்தைகளுக்கு என்று, பிரத்யேக ஃபிங்கர் பிரஷ் கடைகளில் விற்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்தலாம். மென்மை, பொறுமை, இதமான முறையில் பல் துலக்க வேண்டும். பெரியவர்கள் தேய்ப்பது போல குழந்தைகளுக்கு செய்து விடாதீர்கள்.
முதல் பல் முளைத்தது முதல் 1 வயது முடியும் வரை, ஃபிங்கர் பிரஷ்ஷை வைத்தே சுத்தம் செய்யுங்கள். சுத்தம் செய்து முடித்த பின் நன்கு தண்ணீரால் அலசி, மென்மையானத் துணியால் மெதுவாக துடைத்து எடுக்கவும். 1 வயது மேல் உள்ள குழந்தைகளுக்கான பராமரிப்பு ஒரு வயது முடிந்த குழந்தைகளுக்கு, கிட்ஸ் பிரஷ் எனக் கடைகளில் விற்கும். அதை வாங்கி பிரஷ் செய்யலாம்.
ஓரளவுக்கு பிரஷ் செய்வதால் ஏற்படும் தயக்கம், பயம் நீங்கி இருக்கும். குழந்தையிடம் விளையாடி கொண்டே கிட்ஸ் பிரஷ்ஷால் குழந்தைக்கு பிரஷ் செய்யுங்கள். 2 வயது முதல் உளுத்தம் பருப்பு அளவுள்ள பேஸ்ட் பயன்படுத்தி குழந்தைகளுக்கு தேய்த்துவிடுங்கள்.
2 - 5 வயது வரை எவ்வளவு பேஸ்ட் பயன்படுத்தலாம்? மருத்துவர் பரிந்துரைக்கும் பேஸ்ட் அல்லது கெமிக்கல்கள் குறைந்த பேஸ்டை உளுத்தம் பருப்பு அளவில் மட்டுமே போட்டு தேய்க்கலாம். காலை, இரவு தூங்க செல்லும் முன் இருவேளையும் பல் துலக்க வேண்டும் எனக் கட்டாயம் சொல்லி விடுங்கள். இருவேளை பல் துலக்குவதால், பற்களின் சொத்தை, கிருமிகள் பரவுவது, தொற்று போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.
5 வயது + குழந்தைகள் இவர்களுக்கான பேஸ்ட் ஒரு பட்டாணி அளவு எடுத்துப் பயன்படுத்தி பல் தேய்க்க சொல்லுங்கள். அருகில் இருந்து அவர்கள் சரியாக பல் தேய்த்து துப்புகிறார்களா எனக் கவனிக்கலாம். சில காலத்துக்கு கவனித்துக்கொள்ளவும். பிறகு குழந்தைகளே கற்றுக் கொள்வார்கள். குழந்தையின் 7 வயது வரை நீங்கள் பல் துலக்க உதவுவது மிகவும் நல்லது. பிரஷ் செய்யும் முறை எப்படி? முதலில் பேஸ்டை பிரஷ்ஷில் வைத்து, குழந்தைகளை, ‘ஈஈஈ’ சொல்லி பற்களை காண்பிக்க சொல்லி, மெதுவாக மென்மையாக சர்குலர் மோஷனாக சுற்றித் தேய்க்கவும்.
இரு பக்கங்களும், முன் பற்களும் அப்படி தேய்த்துவிட்ட பின், வாயைத் திறக்க சொல்லி உள்ளிருக்கும் பற்களில் மேலும் கீழுமாக, கீழும் மேலுமாகத் தேய்க்கவும். அனைத்துப் பற்களையும் அனைத்துப் பக்கங்களிலும் சுத்தம் செய்த பின், வாய் கொப்பளித்து துப்ப சொல்லலாம். வாய் கொப்பளிப்பது எப்படி என நீங்கள் குழந்தைகளுக்கு செய்து காண்பிக்க வேண்டும்.
வாய் கொப்பளித்து முடித்த பிறகு, நீங்கள் குழந்தைகளின் ஈறுகளில் மெதுவாக, மிதமான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யுங்கள். குழந்தையின் 7 வயது வரையாவது அவ்வப்போது குழந்தைகளின் பல் தேய்க்கும் பழக்கத்தைக் கவனித்து வரலாம். ஈறுகளுக்கு மென்மையான அழுத்தம் கொடுக்கவும் சொல்லித் தரலாம்.
பேபி டூத் பிரஷ் தேர்ந்தெடுப்பது எப்படி? ஒரு வயது முடிந்த குழந்தைகளுக்கு, பிரஷ்ஷை வாங்கும் முன், குழந்தைக்கு பிடித்த நிறத்திலே வாங்கி கொடுங்கள். குழந்தை விருப்பப்படி வாங்கி கொடுத்தால், அடம் பிடிக்காமல் பிரஷ் செய்து கொள்ள சம்மதிப்பார்கள். இல்லையெனில் சேட்டை செய்யலாம். மென்மையான பிரஷ்ஷாக பார்த்து வாங்குங்கள். குழந்தைகளின் கை பிடித்து பிரஷ் செய்யும் வசதியுள்ள சின்ன, சாஃப்டான பிரஷ்ஷாக பார்த்து வாங்கலாம்.
குழந்தைகள் பேஸ்ட் எப்படி இருக்கலாம்? ஒரே நிறத்தில் உள்ள பேஸ்டாக பயன்படுத்தலாம். குட்டிக் குட்டி பீட்ஸ் வருகின்ற பேஸ்ட்களை கட்டாயம் தவிர்க்கவும். பல நிறங்களில் வருகின்ற பேஸ்டை தவிர்க்கலாம். மருத்துவர் பரிந்துரைக்கும் பேஸ்ட் பயன்படுத்தலாம். பெரியவர்கள் வீட்டில் பயன்படுத்துகின்ற பேஸ்டை உளுத்தம் பருப்பு அளவுக்கு போட்டு பயன்படுத்தலாம்.
டூத் பிரஷ் ஹோல்டர் குழந்தையின் பிரஷ், பேஸ்ட் வைக்கும் ஹோல்டர், குழந்தைக்கு பிடித்தபடி உள்ள நிறத்தில், பொம்மைகள் ஒட்டி இருக்கும் ஹோல்டராக இருந்தால் குழந்தைகளுக்கு ஆர்வம் பிறக்கும். இதெல்லாம் குழந்தைகளை கவருவதற்காக செய்ய வேண்டியவை. எந்த வயது வரை பெரியவர்கள் பிரஷ் துலக்கி விடலாம்? 3 வயது வரை, அருகில் பெரியவர்கள் இருந்து மெதுவாக, மென்மையாக நேரம் செலவழித்து பிரஷ் துலக்கி விடலாம். 2 நிமிடங்கள் வரை பிரஷ் செய்வது நல்லது. அதற்கு மேல் வேண்டாம்.
குழந்தைகள் பல் தேய்த்துத் துப்பும் வாஷ் பேஷின் மிக உயரமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... குழந்தைகள் ஸ்டூலில் நின்று தேய்த்து துப்பும் அளவுக்கான வசதியை செய்து கொடுக்கலாம். குழந்தை வாய் கொப்பளிக்க, நேரடியாக குழாயைத் திருப்பி விடாமல், ஒரு மக்கில் தண்ணீர் பிடித்து, அந்தத் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளிக்கும்படி செய்யுங்கள்.
தண்ணீர் வீணாக்க கூடாது என்ற எண்ணம் சிறு வயதில் இருந்தே வரும். குழந்தைகளின் பற்கள் ஆரோக்கியமாக இருக்க செய்ய வேண்டியவை செய்ய கூடாதவை குளிர்பானங்கள், ஐஸ் வாட்டர் குடிக்க கொடுக்க கூடாது. அதிகமாக சாக்லேட், கிரீம், பேஸ்டாக உள்ள உணவு பண்டங்கள் (பீட்சா, சீஸ் உணவுகள்) தரக்கூடாது. சவ்வு போல வரும் மிட்டாய்களைத் தவிர்க்கவும். குழந்தையின் 7 வயது வரை சிவிங் கம் வாங்கி தரக்கூடாது. பல நிறங்களில் வரக்கூடிய சாக்லேட், கேண்டி, இனிப்பு பண்டங்கள் கொடுப்பதைத் தவிர்க்கலாம். பழச்சாறுகள், யோகர்ட், ஸ்மூத்தி, லஸ்ஸி, நீர்மோர் போன்றவை கொடுக்கலாம்.
குறிப்பாக, இனிப்பு பண்டங்கள் சாப்பிட்ட பிறகு, எதைச் சாப்பிட்டாலும், சாப்பிட்ட பின் வாய் கொப்பளிக்க சொல்லி கொடுக்கலாம். கேரட், ஆப்பிள், தேங்காய், முறுக்கு, தட்டைப் போன்றவை கடித்து சாப்பிட கொடுக்கலாம். பற்கள் உறுதியாகும். பற்களுக்கு சிறந்த பயிற்சியாகும்.