Dawood chicken: பாம்பே ஸ்டைல் தாவூத் சிக்கன் செய்வது எப்படி? ஹோட்டல் டேஸ்ட் ரெசிபி
பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்று கிழமை வந்தால் சிக்கன், மட்டன், மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகள் சமைப்பது வழக்கம்.
மட்டன் விலை அதிகமாக இருப்பதால் பலரும் சிக்கன் வாங்கி சமைக்கிறார்கள். சில வீடுகளில் இரண்டும் வாங்கி சமைப்பார்கள்.
சிக்கன் கிரேவி, சிக்கன் ஃப்ரை செய்து அலுப்பாகி விட்டது என்றால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் ரெசிபிகள் செய்து பார்க்கலாம்.
அந்த வகையில், பாம்பே ஸ்டைல் தாவூத் சிக்கன் எப்படி ஹோட்டல் சுவையில் செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் - ½ கிலோ
- இஞ்சி - சிறிய துண்டு (2 இன்ச் அளவு)
- பூண்டு - 15 பல்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 2
- எலுமிச்சை பழம் - ½ பழம்
- உப்பு - தேவையான அளவு
- வெண்ணெய் - தேவையான அளவு
- கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
- வரமிளகாய் - 3
- கொத்தமல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு - 1 டீ ஸ்பூன்
தாவூத் சிக்கன் ரெசிபி
முதலில் சிக்கன் துண்டுகளை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தமாக கழுவிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.
ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் வரமிளகாய், கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, தனியாக எடுத்து வைக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து விழுது போன்று அரைத்துக் கொள்ளலாம். (இது கறியின் வாசணையை அதிகரிக்கும்).
அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சிக்கன் உடன் சேர்த்து கலந்து விட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்த பொடியையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன் பின்னர், மிளகாய் தூள், கரம் மசாலா, மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து, பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து கலந்து வைக்கவும்.
குறைந்தது அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து, ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும் வெண்ணெய் விட்டு, அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் சிக்கனை வேக வைக்கும். (தேவையிருந்தால் சேர்க்கலாம்.) சிக்கன் வெந்தவுடன் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விடவும்.
சிக்கன் நன்றாக வெந்ததும் கஸ்தூரி மேத்தி இலைகளை சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான தாவூத் சிக்கன் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |