சுவைநிறைந்த கமகம கறிவேப்பிலை இட்லி பொடி எப்படி செய்யலாம்?
பொதுவாக நாம் எல்லோரும் கறிவேப்பிலையை சமையலுக்கு பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலானோர் இந்த கறிவேப்பிலையை உணவில் கண்டவுடன் ஒரு ஓரமாக எடுத்து வைப்பார்கள்.
இதனால் கறிவேப்பிலையில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலுக்கு கிடைப்பதில்லை. கறிவேப்பிலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
கண், தலைமுடி, இதய ஆரோக்கியத்தில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக இன்று கறிவேப்பிலை இட்லி பொடி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை - 1 கப்
- உழுத்தம் பருப்பு - 3 ஸ்பூன்
- கடலை பருப்பு - 3 ஸ்பூன்
- உப்பு - 1 டீஸ்பூன்
- காஞ் மிளகாய் - 8
- பெருங்காய பொடி - 1டீஸ்பூன்
- புளி - 2 துண்டு
- பூண்டு - 5 பல்
- தனியா - 3 டீஸ்பூன்
செய்யும் முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து உழுத்தம் பருப்பு, கடலை பருப்பு, போன்றவற்றை வறுக்க வேண்டும். இதன் பின்னர் தனியாவை சேர்த்து கொள்ள வேண்டும்.
பின்னர் புளி காஞ்ச மிளகாய் பூண்டு சேர்த்து எண்ணெய் ஊற்றாமல் வறுக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலையை சேர்த்து வறுக்க வேண்டும். இது நன்றாக வறுபட்டதும் அதனுடன் உப்பு பெருங்காயப் பொடி சோர்த்து வறுக்க வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக வறுபட்டதும் ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக ஆற வைத்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை நீங்கள் இரண்டு மாதங்களுக்கு கண்ணாடி போத்தலில் போட்டு வைத்து கொள்ளலாம்.
இதன் பின்னர் சிறிய இட்லிகளை செய்து எடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி இட்லிகளை சேர்த்து கலந்து விட்டு அதில் செய்து வைத்த இட்லி பொடியை சேர்த்து வறுக்க வேண்டும்.
இப்படி செய்து எடுத்து பரிமாறினால் சுவையான கமகம கறிவேப்பிலை பொடி இட்லி தயார்.