ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும் கொத்தமல்லி தொக்கு எப்படி எளிமையாக செய்யலாம்?
கொத்தமல்லியை தனியா என்றும் அழைப்பார்கள். கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பொதுவாக கொத்தமல்லியின் இலைகள் மற்றும் அதன் உலர்ந்த விதைகளும் தான் உணவுகளில் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.
கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன. இது தவிர நார்ச்சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொத்தமல்லி இலையில் நிறைந்து காணப்படுகின்றது.
இந்த கொத்தமல்லியில் சட்னி முதல் குழம்பு வரை அனைத்திலும் சேர்க்கப்படும். இந்த கொத்தமல்லியை வைத்து எப்படி தொக்கு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு
- வர மிளகாய் – 10
- கடலைப்பருப்பு – ஒரு கப்
- உளுந்தம் பருப்பு – ஒரு கப்
- பூண்டு – 10 பல்
- புளி – சிறு உருண்டை
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காயம் – 2 புளியங்கொட்டை அளவு
செய்முறை
பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன் வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு மூன்றையும் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் சிறிது எண்ணெய் சேர்த்து, புளியையும், பெருங்காயத்தையும் தனித்தனியாக பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கொத்துமல்லியை நன்றாக கழுவி எண்ணெய்விட்டு ஈரம் போக வதக்கவேண்டும். அதனுடன் பூண்டு சேர்த்து துவையல் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் அடுத்து, வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பொரித்த புளி, பெருங்காயம் இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
அது நன்றாக பொடித்து வந்தவுடன், அரைத்த மல்லியை சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது நேரம் உலர வைத்துநமக்கு பிடித்த போத்தலில் போட்டு வைத்துக்கொள்ளலாம். இது ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |