Cervical Cancer: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் என்ன?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள், எவ்வாறு பெண்களை பாதிக்கின்றது என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெண்கள் கர்ப்பப்பையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது புற்றுநோய் ஆகும்.
கர்ப்பப்பை மட்டுமின்றி கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியியை புற்றுநோய் தாக்குகின்றது. இதன் அறிகுறிகள், தடுப்பு முறைகள் பெரும்பாலான பெண்களுக்கு தெரிவில்லை. தற்போது அதுகுறித்த விரிவான தகவலையே இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை வாய் அல்லது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்று நோய் ஆகும்.
கருப்பை வாயில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. கருப்பை வாய் என்பது இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதியாகும்.
பெண்களின் கர்ப்பப்பைக்கும், யோனிக்கும் இடையில் காணப்படும் சிறிய வாய் (cervix) பகுதியில் ஏற்படுகின்றது.
இரண்டு வகையான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
ஸ்குமமஸ் செல் கார்சினோமா- 80-90% கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் செதிள் உயிரணுக்களில் தொடங்குகிறது. பொதுவாக, புற்றுநோய் எக்ஸோசர்விக்ஸ் (வெளிப்புற பகுதி) மற்றும் எண்டோசர்விக்ஸ் (உள் பகுதி) ஆகியவற்றின் உருமாற்ற மண்டலத்தில் தொடங்குகிறது.
காளப்புற்று- இது எண்டோசர்விக்ஸின் சளியை உருவாக்கும் செல்களை (சுரப்பிகள்) பாதிக்கிறது. இந்த வகை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கடந்த 20-30 ஆண்டுகளில் அதிகம் காணப்படுகிறது.
HPV (Human Papillomavirus) என்னும் ஒருவகை வைரஸ் தான் கருப்பைவாய் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது. அதாவது மனிதர்கள், விலங்குகள் என பரவக்கூடிய சாதாரண கிருமியாகவே இந்த HPV வைரஸ் இருக்கின்றது. 150க்கும் மேற்பட்ட வகையிலான HPV வைரஸ்கள் இருக்கின்றன.
இதில் குறிப்பிட்ட வெறும் 15 வகை வைரஸ் மட்டுமே பெண்களின் கருப்பையிலும், கர்ப்பப்பை வாயிலும் புற்றுநோயை உண்டாக்குகின்றது. அதிலும் HPV 16, HPV 18 வைரஸ் வகைதான் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்துவதில் முக்கியமானதாக இருக்கிறது.
எவ்வாறு புற்றுநோயை ஏற்படுத்துகின்றது?
குறித்த HPV வைரஸ் தொற்றானது பாலுறவு நோயாக கருதப்படுகின்றது. இவை பொதுவாக மனிதர்களின் தோல்களின் மேற்பகுதியில் காணப்படும் நிலையில், உறவின் போது சில தருணங்களில் பெண்களின் கருப்பைக்குள் நுழைகின்றது.
ஆனால் இவ்வாறு கருப்பைக்கு செல்லும் வைரஸ் கிருமியானது 90 சதவீதம் பெண்களுக்கு தானாக குணமாகிவிடும் நிலையில், சிலர் மட்டுமே இதில் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான பெண்கள் குறித்த வைரஸ் தாக்கத்தினால் பின்னாளில் புற்றுநோய் நோயாளிகளாக மாறிவிடுகின்றனர்.
அறிகுறிகள் என்ன?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தெளிவாகத் தெரியவில்லை. புற்றுநோய்க்கான அறிகுறிகள் நோய் முற்றிய நிலையில்தான் ஏற்படுகின்றன.
அதிகமாக வெள்ளைப்படுதல்
மாதவிடாய் இல்லாத சமயங்களிலும் ரத்தப்போக்கு ஏற்படுவது
உடலுறவுக்குப் பின் ரத்தப்போக்கு
இடுப்பு வலி
உடல் எடை குறைதல்
சிறுநீர் மற்றும் மலம் கழித்தலின் போது பிரச்னைகள்
யார் பாதிக்கப்படுகின்றனர்?
இளம்வயதில் திருமணம் செய்துகொள்பவர்கள்
இளம்வயதில் உறவில் ஈடுபடுபவர்கள்
உறவின்போது சரியான சுகாதார முறைகளை மேற்கொள்ளாத பெண்கள்
இளம் வயதில் மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு செய்தவர்கள்
அதிகமான குழந்தைகள் பெற்று கொள்பவர்கள்
பலருடன் பாலியல் உறவில் ஈடுபடுபவர்கள்
எச்.ஐ.வி., பாதித்தவர்களுடன் உறவு மேற்கொள்பவர்கள்
மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களை வைத்து பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் பாதிப்பு ஏற்படுகின்றது.
கட்டுப்படுத்த முடியுமா?
HPV தொற்று ஏற்பட்ட பின்பு சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்பு தான் புற்றுநோயாக உருமாற்றம் அடைகின்றது. எனவே இடைப்பட்ட காலங்களில் கருப்பைவாய் புற்றுநோய்க்கான பரிசோதனை முறைகளை மேற்கொண்டு, சிகிச்சை பெற்றால் புற்றுநோய் ஏற்படுவதை நம்மால் தடுக்கவும் முடியும்.
எனவே பெண்கள் அறிகுறிகள் வரும் வரை காத்திருக்காமல் 30 வயதிற்கு மேற்பட்ட தானாக முன்வந்து இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
35வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பெண்கள் இந்த பரிசோதனைகளை குறைந்தபட்சம் இரண்டு முறை செய்து கொண்டாலே இந்த புற்றுநோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
HPV DNA TEST, செர்விக்கல் சைட்டாலஜி (PAP SMEAR), VIA-VILI போன்ற பரிசோதனை முறைகளில் இந்நோயைக் கண்டுபிடிக்க முடியும். இந்த பரிசோதனை முறைகளில் `HPV DNA TEST` சிறந்த பரிசோதனை முறையாக பார்க்கப்படுகின்றது.
சிகிச்சை என்ன?
HPV வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளதான என்பதை பரிசோதனை மூலம் மருத்துவர்கள் உறுதி செய்த பின்பு, புற்றுநோய்க்கு முந்தைய நிலை என்றால், க்ரையோதெரபி (cryotherapy) அல்லது தெர்மோ கொயாகுலேஷன் (Thermocoagulation )போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டு புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
குறித்த பரிசோதனைகளையும், சிகிச்சை முறைகளையும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே பெண்கள் எளிதாக செய்து கொள்ள முடியும்.
அதுவே கருப்பை வாய் புற்றுநோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, கீமோதெரபி போன்ற சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |