பால் புட்டிகளின் வரலாறு...
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலே என்றும் சிறந்தது. இருப்பினும் குழந்தை வளர வளர பாலின் அளவு அதிகமாக தேவைப்படுவதால் தாய்ப்பாலுடன் சேர்த்து புட்டிப் பாலும் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஒரு சிலர் குழந்தைகளுக்கு புட்டிப் பால் கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்துகின்றனர்.
ஏன் குழந்தைகளுக்கு புட்டிப் பால் ஆபத்தானது எனப் பார்ப்போம்.
அதற்கு முன்பாக எந்தவொரு விடயத்துக்குமே வரலாறு என்ற ஒன்று உள்ளது. அதேபோல் புட்டிப்பாலின் வரலாற்றையும் பார்ப்போமே...
கிறிஸ்துவுக்கு முன் 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட களிமண்ணினால் செய்யப்பட்ட பாலூட்டும் பாத்திரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்தப் பாத்திரங்கள் நீள்வட்டமாகவும், நிப்பிள் போன்ற அமைப்பிலும் காணப்படுகின்றன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரங்களாவன, ஆரம்பக்கட்டத்தில் எண்ணெய் விளக்குகளாக பயன்பட்டிருக்கும் என்று எண்ணினாலும் அவற்றில் விலங்குகளின் பாலிலுள்ள கேசீன் புரதம் இருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
இதன்மூலம் முற்காலத்தில் தாய்ப்பாலுக்கு பதிலாக விலங்குகளின் பால் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பு குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக மரம், செராமிக், மாடுகளின் கொம்புகள் என பல பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
19ஆம் நூற்றாண்டுகளில் ஃபீடிங் போத்தல்கள் பல முன்னேற்றம் ஏற்பட்டு, 1845 ஆண்டு றப்பரினால் ஆன நிப்பிள் பயன்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1924ஆம் ஆண்டில் வெப்பத்தைத் தாங்கும் திறனுடன் Pyrex glass கண்டுபிடிக்கப்பட்டு, பால் புட்டி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதோடு, அதில் செயற்கை நிப்பிள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
அந்த காலகட்டத்திலேயே பால் பவுடரின் பாவனை அதிகரிக்க, பால் புட்டியின் உபயோகமும் அதிகரிக்கத் தொடங்கியது. பெரும்பாலாக ப்ளாஸ்டிக்கிலான பால் புட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
தடைசெய்யப்பட்ட பாட்டில்கள்
2010ஆம் ஆண்டுவரை பால் புட்டி செய்வதற்கு பாலிகார்பனேட் ப்ளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது. இந்த ப்ளாஸ்டிக்கில் உள்ள பிஸ்பீனால் ஏ என்னும் கெமிக்கலானது, நீரிழிவு நோய், மலட்டுத்தன்மை, உடல்பருமன் போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது.
அதனால் 2008 ஆம் ஆண்டிலிருந்து பல நாடுகளில் இந்த பிஸ்பீனால் ஏ பால் புட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பிஸ்பீனால் ஏ பால் புட்டிகள் தடை செய்யப்பட்டதால் அதற்கு பதில், பிஸ்பீனால் எஸ், பிஸ்பீனால் எஃப் ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.
பிஸ்பீனால் ஏ பால் புட்டிகளைப் போன்று இந்த போட்டில்களிலும் கெமிக்கல்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் எல்லா பிஸ்பீனால் பால் புட்டிகளையும் தடை செய்ய வேண்டுமென ஆய்வாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் 2019 ஆண்டு ஆண்டு டெல்லி உட்பட 7 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பிஸ்பீனால் ஏ இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த போட்டில்களில் BPA-free or Zero percent BPA என்று பொறிக்கப்பட்டிருந்தால், இந்த BPA-free என்று பொறிக்கப்பட்ட பால் புட்டிகளை நம்பிக்கையுடன் பயன்படுத்தலாமா என்ற கேள்வி தற்போது வரையில் தொடர்கிறது.
ஆய்வு நிறுவனங்களால் பால் புட்டிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் கெமிக்கல்கள் இருந்தால் அதற்கு சீல் வைத்து தகுந்த நடவடிக்கைகள எடுப்பதன் மூலமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். உலகம் முழுவதும் புட்டிப்பாலில் பால் குடிக்கும் குழந்தைகள், பாலுடன் கோடிக்கணக்கான மைக்ரோப்ளாஸ்டிக் துகள்களையும் பருகுகின்றார்கள் என்பது அதிர்ச்சியான உண்மையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.