ஹொட்டல் அறையில் இறந்து கிடந்த பிரபல நடிகர்: என்ன நடந்தது?
பிரபல மலையாள நடிகரான கலாபவன் நவாஸ் ஹொட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார், அவருக்கு வயது 51.
மலையாள சினிமாவில நடிகராக மட்டுமின்றி பின்னணி பாடகர், மிமிக்ரி கலைஞராக இருப்பவர் கலாபவன் நவாஸ்.
1995ம் ஆண்டு சைதன்யம் என்ற படத்தின் மூலமாக நடிகரானார், தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபல்யமானார்.
பெரிய திரை மட்டுமின்றி சின்னதிரை நாடகங்களிலும் நடித்துள்ளார், மேலும் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
இவரது மனைவி ரெஹானா மற்றும் சகோதரர் கலாபவன் நியாஸ் ஆகியோரும் நடிகர்கள் தான்.
இந்நிலையில் பிரகம்பனம் படத்தின் படப்பிடிப்பிற்காக கொச்சியில் உள்ள தனியார் ஹொட்டலில் தங்கியிருந்துள்ளார்.
நேற்று மாலை படக்குழு வெளியே செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் நீண்ட நேரமாகியும் நவாஸ் வரவில்லை. உடனடியாக அவரது அறைக்கு சென்று பார்த்த போது மயக்கமான நிலையில் இருந்துள்ளார்.
அவரை மீட்ட ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அவருக்க மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் அவரது இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறியும் முயற்சியில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கலமசேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்றும், அதன் பின்னர் அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.