கொடூர பஞ்சம்? வெட்டுக்கிளி பூச்சிகளை சாப்பிட்டு வாழும் மடகாஸ்கர் மக்கள் - நெஞ்சை கனக்கும் புகைப்படம்
கடந்த 4 தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வறட்சி மடகாஸ்கர் நாட்டில் ஏற்பட்டுள்ளது. மடகாஸ்கர் தெற்கில் உள்ள கிராம மக்களை வறட்சி கடுமையாக பாதித்துள்ளது. இதனால் அந்த கிராமவாசிகள் பூச்சிகளை வேட்டையாடி உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து உலக உணவு திட்டத்தின் ஷெல்லி தக்ரல் கூறியதாவது -
இந்த பஞ்சம் போன்ற நிலைமைகள், பருவநிலையால் ஏற்படுகின்றன. இதுவரை காணப்படாத நிலை இது. இந்த மக்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதுவும் செய்யவில்லை.
அவர்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில்லை. இருப்பினும் அவர்கள் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.
அம்போசாரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமமான ஃபாண்டியோவாவில் வாழும் கிராம மக்களை, சமீபத்தில் பார்வையிட ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட குழு வந்தனர். அப்போது, அந்த கிராம மக்கள் உண்ணும் வெட்டுக்கிளிகளை அந்த குழுவிடம் காண்பித்தனர்.
அந்த குழுவிடம் கிராமவாசியான டமரியா என்ற பெண் ஒருவர் கூறுகையில், என்னால் முடிந்தவரை பூச்சிகளை சுத்தம் செய்ய முயற்சி செய்கிறேன். ஆனால் தண்ணீரே இல்லை. இதைத் தான் நானும், என் குழந்தைகளும் கடந்த எட்டு மாதங்களாக தினமும் சாப்பிட்டு வருகிறோம். ஏனென்றால் நாங்கள் சாப்பிட எதுவும் இல்லை.
நாங்கள் விதைத்ததை அறுவடை செய்ய மழை இல்லை. கற்றாழை இலைகளைத் தவிர இங்கு எங்களுக்கு சாப்பிட எதுவும் இல்லை. என் கணவரும் சமீபத்தில் பசியால் இறந்துவிட்டார். நாங்கள் உயிர் வாழ மீண்டும் மீண்டும் கற்றாழை இலைகளைத் தேடுவதே எங்கள் வாழ்கையாக இருக்கிறது என்று கண்ணீர் மல்க கூறினார்.
மடகாஸ்கர் அடிக்கடி வறட்சியை அனுபவித்தாலும், எல் நினோவால் ஏற்படும் வானிலை மாற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது என்றாலும், காலநிலை மாற்றம் தற்போதைய பிரச்சனையுடன் நேரடியாக இணைக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கலிபோர்னியாவில் உள்ள சான்டா பார்பரா பல்கலைக்கழகத்தில் அதே வளிமண்டல தரவைப் பார்த்து, பருவநிலை அபாய மையத்தின் இயக்குநர், க்றிஸ் ஃபங்க், “வளிமண்டல வெப்பமடைதல்” உடனான தொடர்பை உறுதிப்படுத்தினார், மேலும் மடகாஸ்கர் அதிகாரிகள் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் பணிகளைச் செய்ய வேண்டும் என்று கூறினார்.
தற்போது நிலவும் இந்த வறட்சியின் தாக்கம், தெற்கு மடகாஸ்கரில் உள்ள பெரிய நகரங்களிலும் உணரப்படுகிறது. பல குழந்தைகள் உணவுக்காக தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சந்தையில் விலை 3 அல்லது 4 மடங்கு உயர்கின்றன. உணவு வாங்குவதற்கு மக்கள் தங்கள் நிலங்களை விற்று பணம் பெறுகிறார்கள் என்று டொலானாரோவில் இருக்கும் ‘சீட்’ என்கிற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் சினா எண்டோர் கூறியுள்ளார்.



