காலை உணவை எளிமையா செய்யணுமா? 10 நிமிடத்தில் கோதுமை மாவு மசாலா தோசை
பொதுவாகவே காலை உணவை ஆரோக்கியமானதாகவும் சுவை நிறைந்ததாகவும் செய்வது பலருக்கும் சவாலான விடயமாகவே இருக்கின்றது.
காரணம் காலையில் குழந்கைள் பாடசாலைக்கும் செல்ல வேண்டும், வீட்டில் உள்ள பெரியவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என வீடே பரபரப்பாக இருக்கும். இந்த நேரத்தில் காலை உணவை விரைவாக செய்ய வேண்டும் என்ற தேவையும் இணைந்து விடுகின்றது.
இதற்கு தீர்வு கொடுக்கும் வகையில் ஆரோக்கியம் நிறைந்த மற்றும் எளிமையாக செய்யக்கூடிய கோதுமை மாவு மசாலா தோசையை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - சுவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு
மசாலா செய்ய தேவையானவை
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு கோதுமை மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கரைத்து வைத்த மாவை சுமார் 5 நிமிடம் வரை மூடி ஊறவைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடலைப் பருப்பை லேசாக வறுக்க வேண்டும்.பின்னர் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.
வதக்கிய பொருட்கள் நன்றாக ஆறியதன் பின்னர், அவற்றை ஊற வைத்துள்ள கோதுமை மாவுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், மாவை தோசையாக ஊற்றி, மேலே சுற்றி எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியம் நிறைந்த மொறு மொறு கோதுமை மாவு மசாலா தேசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |