வாட்ஸ்அப்பை பயன்படுத்த இனி போன் நம்பர் தேவையில்லை - புதிய மாற்றம்
வாட்ஸ்அப் தற்போது தனது பயனர்களுக்காக ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது.

வாட்ஸ் அப்
வாட்ஸ்அப் தனது பயனர்களுக்காக ஒரு பெரிய மாற்றத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அறிக்கைகளின்படி, பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களைப் பகிராமல் மற்றவர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த அம்சம் 2026-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும், நாம் உரையாடும் முறையை இது முற்றிலும் மாற்றிவிடும் என்றும் கூறப்படுகின்றது.

இது இன்ஸ்டாகிராம் அல்லது எக்ஸ் தளம் போலவே ஒவ்வொரு பயனரும் ஒரு தனித்துவமான யூசர் நேம் பெறுவார்கள். பின்னர் அதில் இருந்து நமக்கு வேண்டியவர்களுடன் நாம் பேசலாம்.
ஒருவருடன் தொடர்புகொள்வதற்கு அவர்களின் மொபைல் எண் அவசியமில்லை. நீங்கள் அவர்களின் பயனர்பெயரைக் கொண்டு அவர்களை எளிமையாகத் தேடி, அவர்களுடன் பேசலாம்.
இந்த மாற்றம் சாதாரண பயனர்களுக்கு மட்டுமல்லாமல், வணிகக் கணக்குகளுக்கும் நன்மை பயக்கும். நிறுவனங்கள் தங்களின் பொதுவான பயனர்பெயர்கள் மூலம் வாடிக்கையாளர்களுடன் எளிதாகத் தொடர்புகொள்ள முடியும்.

தொலைபேசி எண்கள் பயன்படுத்தப்படாதா?
இந்த அம்சம் அறிமுகப்படுத்தினாலும் தொலைபேசி எண்கள் பாவனையில் இருக்கும்.
பின்தளத்தில் கணக்குச் சரிபார்ப்புக்காக அவை தொடர்ந்து பயன்படுத்தப்படும். அதாவது பாதுகாப்பு நோக்கங்களுக்காக அந்த எண் அவசியமாக இருக்கும், ஆனால் அதை மற்றவர்களுடன் பகிர வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த அம்சம் செயல்பாட்டிற்கு வரும்போது, பயனர்கள் தங்கள் கணக்கிற்கு ஒரு தனித்துவமான பயனர்பெயரை அமைத்துக்கொள்ள முடியும். அதன் பின்னர் யார் வேண்டுமானாலும் அந்தப் பயனர்பெயரைத் தேடி, உங்கள் எண்ணைப் பார்க்காமலேயே உங்களைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும், பயனர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்திக்கொள்ள அல்லது பழைய முறையிலேயே தொடர்ந்து உரையாடவும் தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த மாற்றத்தின் மிகப்பெரிய நன்மை தனியுரிமையாக இருக்கும். பலர் தங்கள் தொலைபேசி எண்களைப் பகிரத் தயங்குகிறார்கள், எனவே இந்த அம்சம் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
வணிகங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான தொடர்பு மேலும் பாதுகாப்பானதாகவும் எளிதானதாகவும் மாறும் என்பதற்காக இது அறிமுகப்படுத்த இருக்கிறது.
இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டால், வாட்ஸ்அப் பயன்படுத்தப்படும் விதம் கணிசமாக மாறும்.
இந்த மாற்றம் பயனர்களுக்கு அதிகக் கட்டுப்பாடு, மேம்பட்ட தனியுரிமை மற்றும் எளிதான இணைப்பை அளித்து, செய்தி அனுப்பும் அனுபவத்தை இன்னும் சிறப்பாக மாற்றக்கூடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |