பூண்டு சேர்க்காமல் இட்லி மிளகாய் பொடி... எந்த சட்னியையும் எடுத்துக்கவே மாட்டீங்க
இட்லி மற்றும் தோசைக்கு வைத்து சாப்பிடுவதற்கு பூண்டு சேர்க்காமல் அருமையான இட்லி மிளகாய் பொடி எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
காலை வேளையில் அவசரமாக வேலைக்கு செல்பவர்கள் சாம்பார், சட்னி வைப்பதற்கு சிரமமான நிலையில், அருமையான இட்லி மிளகாய் பொடி உதவியாக இருக்கும்.
தென்னிந்திய மக்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருப்பது இட்லி, தோசை தான். இதற்கு சாம்பார் மற்றும் சட்னி வைத்து சாப்பிடுவது வழக்கம்.
இவற்றை செய்வதற்கு நேரம் இல்லையெனில் இட்லி மிளகாய் பொடியை வைத்து சாப்பிடுவார்கள். அவ்வாறு சத்தான மற்றும் சுவையான இட்லி மிளகாய் பொடியினை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை அல்லது கருப்பு எள் - 1/4 கப் (50 கிராம்)
கடலை பருப்பு - 1/4 கப் (50 கிராம்)
உளுந்தம் பருப்பு - 1/2 கப் (100 கிராம்)
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
கட்டி பெருங்காயம் - 25 கிராம்
மங்களூரு வர மிளகாய் - 15
வர மிளகாய் - 10
செய்முறை
முதலில் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் வெள்ளை எள் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பொரியாமல் வறுத்து மட்டும் எடுத்தால் அதன் சுவை கசப்பாக இருக்கும்.
இதனை தட்டு ஒன்றில் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, அதே கடாயில் கடலைப் பருப்பை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எள்ளுடன் கொட்டிக் கொள்ளவும்.
பின்பு உளுந்தம் பருப்பை கடாயில் சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எள், கடலை பருப்புடன் சேர்த்துக் கொள்ளவும்.
அதே கடாயில் மிளகு, சீரகம், கருவேப்பிலை இவற்றினை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வறுத்து, ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருளுடன் சேர்த்துக் கொள்ளவும்.
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் கட்டி பெருங்காயத்தை சேர்த்து பொரித்து, எண்ணெய் இல்லாமல் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருளுடன் சேர்த்துக் கொள்ளவும்.
மேலும் அரை ஸ்பூன் எண்ணெய் கடாயில் ஊற்றி, மிளகாய் வத்தல் சேர்த்து வறுத்து 10 நிமிடம் ஆற வைத்துக் கொள்ளவும்.
முதலில் மிக்ஸியில் இதனைப் போட்டு நன்றாக அரைத்த பின்பு, ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் பொருட்களையும் மிளகாய் பொடியும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் அருமையான இட்லி மிளகாய் பொடி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |